ஈழத்தமிழர் உரிமைகளை முன்வைத்துச் சிறிலங்காவுக்கு அழுத்தம்: பின்லாந்து நாடாளுமன்றத்தில் எழுத்துமூலக் கேள்வி!
பின்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பெல்லா போர்ஸ்க்ரென் (Bella Forsgrén), நாடாளுமன்றத்தில் ஈழத்தமிழர்களின் மனித உரிமைகள் குறித்து எழுத்துமூலக் கேள்வியொன்றைச் சமர்ப்பித்துள்ளார்.
கடந்த பெப்பிரவரி 25 ஆம் நாள் (25.02.2026), பின்லாந்தும் சிறிலங்காவும் எல்சிங்கியில் (Helsinki) அரசியல் கலந்தாலோசனை அமைப்பை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தத்திற்குப் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் பெல்லா போர்ஸ்க்ரென் கடந்த ஏப்பிரல் 15 ஆம் நாள் (15.04.2026) நாடாளுமன்ற அவைத்தலைவரிடம் (சபாநாயகர்) ஓர் அலுவல்முறையான எழுத்துமூலக் கேள்வியைச் சமர்ப்பித்தார்.
அதில், இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி, பின்லாந்தின் மனித உரிமை அடிப்படையிலான வெளியுறவுக் கொள்கையை நடைமுறைப்படுத்தவும், தமிழர்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தக் கொழும்பு அரசின் மீது அழுத்தம் செலுத்தவும் பின்லாந்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

வரலாற்று உண்மைகளைச் சுட்டிக்காட்டிய உறுப்பினர்
1948 முதல் ஈழத்தமிழர்களின் தன்னாட்சி (சுயநிர்ணய) உரிமையை இலங்கை அரசு மறுத்து வருகிறது என்றும், பின்லாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவளித்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 51/1 தீர்மானம் உட்பட, பன்னாட்டுச் சமூகத்துடன் ஒத்துழைக்க இலங்கை அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், பல அறிக்கைகள் கடுமையான போர்க்குற்றங்கள், பொதுமக்கள் மீதான தாக்குதல்கள், கட்டாய இடப்பெயர்வுகள், படுகொலைகள், பாலியல் வன்முறைகள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டியுள்ளன; இவை அனைத்தும் இனவழிப்பாகவே (இனப்படுகொலை) கருதப்படக்கூடியவை என்றும், பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசு கூட ஐக்கிய நாடுகளுடன் ஒத்துழைக்கவும், பொறுப்புக்கூறல் மற்றும் நீதி வழங்கவும் மறுக்கும் அதே நிலைப்பாட்டையே தொடர்ந்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
வெளியுறவு அமைச்சருக்கு முன்வைக்கப்பட்ட கேள்வி
இதனடிப்படையில், பின்லாந்து வெளியுறவு அமைச்சர் எலினா வால்டோனென் (Elina Valtonen) அவர்களுக்குப் பின்வரும் கேள்வியை பெல்லா போர்ஸ்க்ரென் முன்வைத்தார்:
"பின்லாந்திற்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான அரசியல் கலந்தாலோசனை அமைப்பைப் பயன்படுத்தி, தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் மற்றும் போரின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த விசாரணையில் முன்னேற்றம் ஏற்படப் பின்லாந்து எவ்வாறு செயல்படத் திட்டமிட்டுள்ளது?"
இந்தக் கேள்விக்கு நாடாளுமன்றத்தில் அலுவல்முறையாக விடையளிக்க வெளியுறவு அமைச்சருக்கு 21 நாள்கள் கால அவகாசம் உள்ளது.
மனித உரிமைக் கொள்கை மீதான ஐயம்
பொறுப்புக்கூறல் மற்றும் நீதியில் மிகவும் மோசமான வரலாற்றைக் கொண்டுள்ள ஒரு அரசுடன் பின்லாந்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த முயற்சிப்பது மிகவும் கவலைக்குரியது. தமிழ் இனவழிப்பிற்கான பொறுப்பைத் தவிர்க்கும் கொழும்பு அரசுடன் உறவுகளை வலுப்படுத்தும் நிலையில், பன்னாட்டு அரங்கில் தாம் முன்னிறுத்துவதாகக் கூறும் மனித உரிமை மையப்படுத்தப்பட்ட வெளியுறவுக் கொள்கையைப் பின்லாந்து உண்மையில் கடைப்பிடிக்கிறதா என்பது கேள்விக்குறியாகிறது.
பொருளாதார மற்றும் சமூக நலன்கள் அடிப்படை மனித உரிமை விழுமியங்களை மீற அனுமதிக்கக் கூடாது. ஈழத்தமிழர்களின் மனித உரிமைச் சிக்கல்களுக்குத் தீர்வு காணப்படும் வரை, பின்லாந்து அரசு தனது நிலைப்பாட்டைப் பயன்படுத்திக் கொழும்பு அரசின் மீது அதியுச்ச அழுத்தத்தைச் செலுத்துவது மிகவும் இன்றியமையாததாகும்.
