பிரித்தானியச் சதுரங்கத் தரவரிசையில் முதல் 20 இடங்களுக்குள் 4 தமிழர்கள்: 11 வயது சிறுமி முதலிடம் !
பன்னாட்டுச் சதுரங்கக் கூட்டமைப்பு (FIDE) வெளியிட்ட 2026 ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்களுக்கான தரவரிசைப் பட்டியலின்படி, பிரித்தானியாவின் முன்னணி 20 பெண் சதுரங்கப் போட்டியாளர்களுக்கான தரவரிசையில் நான்கு பிரித்தானியத் தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இப்பட்டியலில், 11 அகவையுடைய போதனா சிவானந்தன் முதலிடம் பிடித்துள்ளார். இவர் 2366 என்ற ‘எலோ’ (Elo) தரப்புள்ளிகளுடன் பிரித்தானியாவின் முன்னணிப் பெண் சதுரங்க விளையாட்டாளராக உருவெடுத்துள்ளார். காரோ (Harrow) பகுதியைச் சேர்ந்த இம்மாணவி, பிரித்தானியப் பெண்கள் சதுரங்கப் போட்டியில் நான்கு முறை வாகை சூடிய லான் யாவோவை (Lan Yao) முந்தி, இங்கிலாந்தின் சார்பாகக் களமிறங்கும் போட்டியாளர்களிடையே இந்த முதலிடத்தைக் கைப்பற்றியுள்ளார்.
இவரது இந்த விரைவான வளர்ச்சி பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது. ஏற்கனவே ‘பன்னாட்டுப் பெண் சதுரங்க வல்லுநர்’ (Woman International Master) என்ற தகுதியைப் பெற்றுள்ள போதனா, பன்னாட்டுப் போட்டிகளில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பதிவு செய்துள்ளார். அத்துடன், உலகளாவிய சதுரங்க அரங்கில் மிகவும் நம்பிக்கைக்குரிய இளம் திறமையாளர்களில் ஒருவராகவும் அவர் போற்றப்படுகிறார். பிரித்தானிய முன்னாள் தலைமையமைச்சர் இரிசி சுனக் (Rishi Sunak), டவுனிங் தெருத் தோட்டத்தில் இச்சிறுமியுடன் தான் சதுரங்கம் விளையாடியதை நினைவுகூர்ந்து, "அவரது இந்த வெற்றி வியப்பளிக்கவில்லை" என 'எக்சு' (X) வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இவரது இந்த வளர்ச்சி, அண்மைக் காலங்களில் பிரித்தானியச் சதுரங்க வரலாற்றில் ஏற்பட்ட மிகச் சிறந்த திருப்புமுனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
மேலும், இத்தரவரிசைப் பட்டியலில் முதல் 20 இடங்களுக்குள் அக்சயா கலையழகன் (10 ஆவது இடம்), அனுசா சுப்பிரமணியன் (14 ஆவது இடம்), சாம்பவி அரிகரன் (15 ஆவது இடம்) ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இது, உயர்மட்டத் தரவரிசையில் பிரித்தானியத் தமிழ் விளையாட்டாளர்களின் வளர்ந்து வரும் இருப்பை உறுதிப்படுத்துகிறது.
இதற்கிடையே, இலெய்செசுட்டர் (Leicester) பகுதியைச் சேர்ந்த 9 அகவையுடைய தாரா தமிழ்ச்செல்வன் என்பவரும் நாடு முழுவதும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். விரைவுச் சதுரங்கப் (Rapid chess) போட்டிகளில் சிறப்பான திறமையை வெளிப்படுத்திய அவர், தற்போது 46 ஆவது இடத்தில் உள்ளார். இவரது எழுச்சியானது, சதுரங்க விளையாட்டில் தடம் பதிக்கும் பிரித்தானியத் தமிழ் இளந்தலைமுறையினரின் வளர்ச்சியைக் காட்டுவதாக அமைந்துள்ளது.