திங்கள், 23 மார்ச், 2026
|
திறனாய்வு

தையிட்டியில் என்ன தான் நடக்கிறது? - நில ஆக்கிரமிப்பும் உண்மைகளும் !

தொடர்ச்சியாக நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் கைதுசெய்யப்பட்ட சம்பவம் சட்டத்தின் ஆட்சி, நல்லிணக்கம், சிங்கள்  - பௌத்த பெரும்பாண்மை வாத மனோநிலை, ஆளும் சிறிலங்கா அரசுகளின் நிலைப்பாடுகள் தொடர்பில் சிந்திப்பதற்கு உரையாடல்களிற்கான வெளிகளையும் ஏற்படுத்தியுள்ளது. தையிட்டி திஸ்ஸ விகாரை விவகாரம் தொடர்பில் வெவ்வேறு தரப்பினர்களும் தமக்கேற்ற வகையிற் கருத்துரைப்பதும், அதனைச் சூழ பல்வேறு சதிக்கோட்பாடுகள் கட்டியெழுப்பப்படுவதும் இடம்பெற்று வருகின்றது. இந்தக் கட்டுரை தையிட்டி விகாரை விடயத்தில் நடந்தவை மற்றும் தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பவை தொடர்பில் தனது அவதானிப்பினைச் செலுத்துகின்றது.

தையிட்டியில் என்ன தான் நடக்கிறது? - நில ஆக்கிரமிப்பும் உண்மைகளும் !
தமிழேந்தி
தமிழேந்தி

மார்ச் 23, 2026 · 5 நிமிட வாசிப்பு

தற்பொழுது வடக்கு – கிழக்கில் பெரிதும் பேசு பொருளாகியுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரை விவகாரம் தமிழர் தரப்பில் நில ஆக்கிரமிப்பு, பௌத்தமயமாக்கம் தொடர்பான கரிசனைகளை ஏற்படுத்தியுள்ளது. குறித்த தையிட்டி விவகாரத்தில் சிறிலங்கா அரசாங்கமும், தனிநபர்கள் பலரும் வெவ்வேறு கருத்துக்களை முன்வைத்து வரும் நிலையில், அந்த விவகாரத்தில் காணப்படும் உண்மைகள் என்ன? என்பது பற்றி இக்கட்டுரை அலசுகின்றது.

தமிழரிடமிருந்து சிங்களவருக்குச் கைமாறிய நிலம்

ஈழத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் வடக்கின், காங்கேசன்துறைப் பகுதியில் அமைந்துள்ள கிராமமே தையிட்டியாகும். அக்கிராமத்தில் நிலவுரிமையினைக் கொண்டிருந்த தமிழர் ஒருவர், கொழும்பைச் சேர்ந்த 'கலகம ஆராச்சிகே ஆபிரகாம் பெரேரா' என்ற சிங்கள நபர் ஒருவரிடம் பணத்தினைக் கடனாகப் பெற்றுக் கொண்டுள்ளார். அவ்வாறு பெற்றுக் கொண்ட பணத்தினை மீளளிக்க முடியாமையினால் தனக்கு உரிமையாகவிருந்த நிலத்தின் ஒரு பகுதியை (1.25 ஏக்கர்) நிதிக்கடனிற்கு மாற்றாக வழங்கியுள்ளார்.

ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் தொடர்பான விளக்கப்படம்

1946ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் திகதி சத்தியக்கூற்று முடிப்பொன்றின் ஊடாக நிலத்தின் உரிமையினைப் ஆபிரகாம் பெரோ பெற்றுக் கொண்டுள்ளார். அவ்வாறு பெற்றுக் கொண்ட உரிமையின் ஊடாக குறித்த நிலத்தினை நயினாதீவு நாகவிகாரையின் பிக்கு பிராணமவத்த பண்டித்த தம்மகீர்த்தி திஸ்ஸ தேரர் மற்றும் களுத்தறை பண்டித்த சீல திஸ்ஸ தேரர் ஆகிய இருவரையும் அங்கு அமைக்கப்படும் திஸ்ஸ விகாரைக்கான காப்பாளர்கள் எனத் தெரிவித்து குறித்த விகாரைக்கு அந்நிலத்தினை தானமளித்துள்ளார்.

1946ஆம் ஆண்டிலேயே அங்கு இருந்ததாக நம்பப்படும் போதி மரமொன்றினை அடிப்படையாக வைத்து சிறிய அளவிலான விகாரை மற்றும் ஆச்சிரமம் அமைக்கப்பட்டு வழிபாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 1956 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன ஒடுக்குமுறைகள் மற்றும் கலவரங்களைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்ற நிலைகளினால் குறித்த பகுதிகளிற்கு வழிபாட்டு நோக்கங்களிற்காக தங்கியிருந்த பௌத்தர்கள் அவ்விடங்களை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது.

ஆபிரகாம் பெரேராவினால் விகாரைக்கு தானமளிக்கப்பட்ட காணியின் உறுதிப்பத்திரம்

அவ்விடத்தினை விட்டு பௌத்தர்கள் வெளியேற வேண்டிய நிலைமை ஏற்பட்ட போதும், அந்நிலம் யாரினாலும் கைப்பற்றப்படவில்லை. 1970 ஆம் ஆண்டுகளில் இறுதியில் அந்த விகாரை முழுமையாக சிதைவடைந்ததாக கூறப்படுகின்றது. ஈழ விடுதலைப் போர்க் காலத்தில் தையிட்டிக் கிராமமானது பலாலி இராணுவ முகாமிற்கு அருகாமையில் இருப்பதனால் உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டது. போர் நிறைவடைந்ததன் பின்னர் தற்போது வரையிலும் அந்த நிலைமை தொடர்ந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இராணுவப் படையெடுப்புக்கள் காரணமாக தமிழ் மக்கள் தங்கள் நிலங்களை விட்டு வெளியேறிய சூழலில் வலி.வடக்குப் பகுதி சிறிலங்கா இராணுவத்தினால் கைப்பற்றப்பட்டது.

தற்பொழுது விகாரை அமைக்கப்பட்டள்ள நிலம்

ஈழ விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்ட 2009ஆம் ஆண்டிற்குப் பின்னர், வலி.வடக்குப் பகுதியில் பெரும்பாலான நிலங்கள் தமிழர்களிடம் ஒப்படைக்கப்பட்ட போதும், தற்போது விகாரை அமைக்கப்பட்டுள்ள நிலப்பகுதி மட்டும் மக்களிடம் மீள ஒப்படைக்கப்படவில்லை. குறித்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ முகாமில் சிறிலங்கா இராணுவம் தொடர்ந்தும் நிலைகொண்டிருந்தது. சிங்கள நபரினால் வழங்கப்பட்ட நிலம் பிறிதொரு இடத்தில் உள்ள நிலையில், இராணுவ முகாம் அமைந்திருந்த பகுதியில் திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்டள்ளது.

தையிட்டிப் பகுதியில் தேவநம்பிய தீசன் மன்னன் காலத்திலிருந்து விகாரையொன்று இருந்து வந்துள்ளதாக மகாவம்சம் குறிப்பிடுவதாகவும், அதனை பிற்காலங்களில் பௌத்தர்கள் கைவிட வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் அந்த விகாரையே மீளவும் அந்த நிலத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையின் விகாராதிபதியினால் தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறெனினும் குறித்த நிலப்பகுதி விகாரைக்குரியது தான் என்பதற்கான சட்ட வலுவுள்ள ஆவணங்கள் எவையும் விகாராதிபதி தரப்பினால் வெளிப்படுத்தப்படவில்லை என்பதோடு, இதிகாசப் புனைவுகளை அடிப்படையாகக் கொண்டே உரிமை கோரல்கள் இடம்பெற்று வருகின்றது.

திஸ்ஸ விகாரைக் கட்டுமானம்

தையிட்டியில் சிங்கள நபரினால் வழங்கப்பட்ட விகாரைக் காணியில் 2018 ஆம் ஆண்டு மைத்திரி-ரணில் அரசாங்கத்தில் வடக்கு மாகாண ஆளுநராகப் பொறுப்பு வகித்த ரெஜினோல்ட் குரேயினால் அடிக்கல் நாட்டப்பட்ட போதும் அவ்விடத்தில் விகாரை அமைக்கப்படவில்லை. பின்னர் 2021.01.30ஆம் திகதி கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் விகாரைக்குரியதென இனங்காணப்பட்ட நிலம் அருகே இருக்க, இராணுவ முகாமை அமைந்திருந்த தற்போதைய காணியினுள், அதாவது இராணுவ முகாமினுள் விகாரையானது அமைக்கும் பணி சிறிலங்கா இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவின் மேற்பார்வையில் நடைபெற்றது. குறித்த விகாரையின் கட்டுமானப் பணிகளிற்கு மொறட்டுவப் பல்கலைக்கழகத்தின் கட்டடக் கலைப் பீடத்தின் பேராசிரியர்கள் சமித மானவடுவ மற்றும் நிமல் டி சில்வா ஆகியோர் தொழில்நுட்ப நிபுணத்துவத்தினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தையிட்டி திஸ்ஸ விகாரைக் கட்டுமானம் சிறிலங்கா இராணுவத்தினரால் மேற்கொள்ளும் போதான காட்சி | மூலம் - சிறிலங்கா இராணுவத்தின் வலைத்தளம்

நீண்டகாலமாக இராணுவக்கட்டுப்பாட்டில் அப்பகுதி காணப்பட்டமையினால் அதைச் சூழ அமைந்திருந்த பெருமரங்கள் மறைத்து நிற்க, முழு இராணுவப் பாதுகாப்பில் அப்பகுதிகள் யாவும் சுற்றி மறைக்கப்பட்டு குறித்த பகுதியில் தூபி அமைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. விகாரையின் கட்டுமானம் மரங்களின் அளவினை மீறி மேலnழுவதை அவதானித்த அப்பகுதி மக்கள் குறித்த பகுதியில் விகாரை அமைக்கப்படுவதனை இனங்கண்டு கொண்டமையும் எதிர்ப்பினை வெளியிட்டமையும் நோக்கத்தக்கது.

2018ஆம் ஆண்டு வடக்கு மாகாண ஆளுநராக பொறுப்பு வகித்த ரெஜினோட் குரேயினால் விகாரையின் பெயரில் தானமளிக்கப்பட்ட நிலத்தில் அடிக்கல் நாட்டப்படுதல். பின்னர் இவ்விடத்தில் விகாரை அமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2021.01.30 ஆம் திகதி சிறிலங்காவின் இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவின் தலைமையில் தற்பொழுது மக்களின் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு அடிக்கல் நாட்டப்படுதல்

நிலத்திற்கான உரிமை

தற்போது தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டுள்ள நிலப்பரப்பு முழுவதும் மொத்தமாக 16 உரிமையாளர்களிற்குச் சொந்தமானது என்று இனங்காணப்பட்டுள்ளது. நிலங்களின் உரிமையாளர்கள் சட்டபூர்வமான காணி உறுதிப்பத்திரங்களினைக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் காணி உரிமைப் பத்திரங்கள் உண்மையானவை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு, அவற்றுள் 1928ஆம் ஆண்டு முதலான சட்டபூர்வ காணி உறுதிப்பத்திரங்கள் உள்ளடங்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

சட்டமுறையற்ற கட்டுமானம்

தனியார் ஒருவர் தமது நிலத்தில் கட்டுமானமொன்றினை மேற்கொள்ளும் போது இரண்டு தேவைப்பாடுகளை பூர்த்தி செய்திருத்தல் வேண்டும். ஒன்று நிலத்திற்கான உரிமையினைக் கொண்டிருத்தல் மற்றையது குறித்த பிரதேசத்தை ஆளுகை செய்யும் உள்ளூராட்சி மன்றத்திடம் சட்டபூர்வ ஒப்புதல்களினைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் தையிட்டியில் 16 வௌ;வேறு தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை இவ்விரு தேவைப்பாடுகளையும் பூர்த்தி செய்யவில்லை.

வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் 21.07.2022 அன்று நடைபெற்ற மாதாந்த அமர்வில் தையிட்டி தெற்கு துஃ250 கிராம சேவையாளர் பிரிவில் விகாரைக்குரிய காணி அல்லாமல் தனியாருக்குரிய காணியில் விகாரை அமைக்கப்படுவதாகவும், அதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டுமெனவும், விகாரைக்குரிய காணியில் சபையின் உரிய அனுமதியினைப் பெற்று விகாரை அமைக்கப்பட வேண்டும் எனவும் 14ஃ21ஃ07ஃ2022 ஆம் இலக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

உரிய ஒப்புதல்கள் பெறப்படாது தனியார் காணியில் விகாரை நிர்மாணிக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபைத் தலைவரினால் 18.08.2022 அன்று திகதியிடப்பட்ட கடிதங்கள் ஊடாக சிறிலங்காவின் அரச தலைவர் மற்றும் பிரதமரின் பணிமனைகளுக்கு தடுத்து நிறுத்துமாறு கோரி முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.

இவ்விடயம் தொடர்பில் உரிய மற்றும் துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரி சிறிலங்கா அரச தலைவர் பணிமனையினால் 30.08.2022 அன்று பௌத்தசாசன அமைச்சின் செயலாரையும், பிரதமரின் பணிமனையினால் 2022 செப்டெம்பர் மாதம் பௌத்தமத அலுவல்கள் திணைக்கள ஆணையாளரையும் கோரியிருந்தமை கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரதேச சபையின் முறைப்பாடுகளிற்கு எவ்வித முன்னேற்றகரமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத நிலையில், தையிட்டி திஸ்ஸ விகாரையை 'சட்டவிரோதக் கட்டுமானம்' என்று பிரகடனப்படுத்தி மும்மொழிகளிலும் அறிவித்தல் பலகையை நாட்டுவதற்கான தீரமானம் 18.12.2025 அன்று வலி. வடக்குப் பிரதேச சபை அமர்வில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தவிசாளர் சோ.சுகிர்தன் தலைமையின் நடைபெற்ற சபை அமர்வில் உறுப்பினர் ப.சாருஜன் அவர்களினால் முன்மொழியப்பட்ட தீர்மானம் தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட அனைத்துக் கட்சி உறுப்பினர்களாலும் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சிறிலங்கா காவல் துறையின், பலாலி பொறுப்பதிகாரியினால், பிரதேச சபையினால் சட்டவிரோதக் கட்டுமானம் என்று பெயர் பலகை நாட்டப்படவுள்ளதாக புலனாய்வுப் பிரிவிலிருந்து தகவல் வந்துள்ளதாகவும், அது இந்து மற்றும் பௌத்த மதங்களிடையே முரண்பாட்டை தோற்றுவிக்கும் என்றும், அவ்வாறு பெயர் பலகையினை நாட்டுவதாக இருந்தால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வலி.வடக்கு பிரதேச சபையின் செயலாளருக்கு 20.12.2025 அன்று திகதியிடப்பட்ட கடிதம் மூலம் எச்சரிக்கப்பட்டிருந்தது.

எனினும் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய 'சட்டவிரோதக் கட்டுமானம்' என்று பிரகடனப்படுத்திய அறிவித்தற் பலகையை நாட்டுவதற்குச் கடந்த 21.12.2025 அன்று சென்ற பிரதேச சபையினர் சிறிலங்கா காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தனர்.

21.12.2025 அன்று நடைபெற்ற போராட்டத்தின் போது...
21.12.2025 அன்று நடைபெற்ற போராட்டத்தின் போது...
21.12.2025 அன்று நடைபெற்ற போராட்டத்தின் போது...

செய்திமடல் பதிவு

முரண்செய் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்.