சனி, 21 மார்ச், 2026
|
தினசரி செய்திகள்

யாழ். பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் கடத்திப் படுகொலை: மருமகன் மற்றும் மகள் கைது

யாழ். பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் கடத்திப் படுகொலை: மருமகன் மற்றும் மகள் கைது

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீட முதுநிலை விரிவுரையாளர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது சடலம் தனங்கிளப்பு காட்டுப்பகுதியில் இன்று (21.03.2026) அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. தமது காதலுக்கு ஒத்துழைக்கவில்லை என்ற முரண்பாடு காரணமாக அவரது மருமகனாலேயே இந்தப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடத்தல் முறைப்பாடு மற்றும் தடயங்கள்

குடும்ப விவாகரத்து வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் பின்னணியில், தனது தாயையும் தங்கையையும், தங்கையின் கணவரே கடத்திச் சென்றதாக விரிவுரையாளரின் மகன் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். இந்த முறைப்பாட்டையடுத்து பாண்டியன் தாழ்வில் உள்ள அவர்களது வீட்டிற்குச் சென்ற காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்தனர். இதன்போது, வீட்டின் ஓடு கழற்றப்பட்டு கயிறு மூலம் தப்பிச் சென்றதற்கான தடயங்களும், அறுக்கப்பட்ட தலைமுடியும் வீட்டிலிருந்து ஆதாரங்களாகக் கண்டெடுக்கப்பட்டன.

தொழில்நுட்ப உதவியுடன் கைது

இதனைத் தொடர்ந்து தீவிர விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர், சந்தேகநபர்கள் பரந்தன் பகுதியில் உள்ள தானியங்கி பண இயந்திரத்தில் (ATM) பணம் பெற்றமை மற்றும் திருகோணமலை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் விரைவுத் தகவல் குறியீடு (QR Code) ஊடாக வாகனத்திற்கு எரிபொருள் நிரப்பியமை ஆகியவற்றைத் கண்டறிந்தனர். குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தின் கண்காணிப்பு ஒளிப்படக் கருவி (CCTV) காணொளிகளை அடிப்படையாகக் கொண்டு தேடுதலைத் தீவிரப்படுத்திய காவல்துறையினர், திருகோணமலையில் வைத்து 19 வயதுடைய மகள் மற்றும் 21 வயதுடைய மருமகன் ஆகிய இருவரையும் கடந்த வெள்ளிக்கிழமை (19.03.2026) கைது செய்தனர்.

விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்

கைது செய்யப்பட்ட இருவரையும் யாழ்ப்பாணம் காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்து விசாரணைக்கு உட்படுத்திய போது, கடத்தலின் பின்னர் மருமகன் மேற்கொண்ட தாக்குதலிலேயே விரிவுரையாளர் உயிரிழந்த தகவல் வெளிவந்துள்ளது. அத்துடன், உயிரிழந்த விரிவுரையாளரின் சடலத்தை யாழ்ப்பாணம் தனங்கிளப்புப் பகுதியில் வீசிவிட்டுச் சென்றதாக அவர்கள் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் தேடுதல் நடத்தப்பட்டு சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்.

செய்திமடல் பதிவு

முரண்செய் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்.