தையிட்டி : சட்டத்தின் ஆட்சியா? ஆக்கிரமிப்பின் சாட்சியா?
என்.பி.பி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டுகளைக் கடந்துள்ளது. எனினும் தமது தேர்தல் அறிக்கைகள் மற்றும் மேடைகளில் “சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வோம்” என்ற வாக்குறுதியை தையிட்டி ஆக்கிரமிப்பு விகாரை விவகாரத்தில் நடைமுறைப்படுத்துவதற்கும், அநுர அவ்வப்போது மேடைகளில் முழங்கிய “மக்களின் நிலங்களை மக்களிற்கே வழங்குவோம்” என்ற வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கும் சித்தமின்றியிருக்கின்றது.
மார்ச் 23, 2026 · 3 நிமிட வாசிப்பு
“தையிட்டி சட்டவிரோத ஆக்கிரமிப்பு விகாரையை இடிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று கடந்த டிசம்பர் 26ஆம் திகதி நடைபெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் அழுத்தம் திருத்தமாக தெரிவித்து விட்டார் அமைச்சர் இ.சந்திரசேகரன். போதாக்குறைக்கு கடந்த சனவரி 10, 2026 அன்று நடைபெற்ற கலந்துரையாடலில் அபகரிக்கப்பட்ட காணிகளை பகுதியளவிலேனும் விடுவிப்பதற்கு திஸ்ஸ விகாரை விகாராதிபதியும் சிறிலங்கா பௌத்த சாசன அமைச்சின் பிரதிநிதிகளும் திட்டவட்டமாறு மறுத்துள்ளனர். மக்களின் நிலங்களை மக்களுக்கே மீளப் பெற்றுக் கொடுப்பதற்கோ, சிங்கள - பௌத்த பேரினவாத்தை அரசுக் கட்டமைப்பிலிருந்து நீக்குவதற்கோ என்.பி.பி அரசாங்கம் தயாராக இல்லை என்பதை உணர்த்துகின்றது.
மக்களுக்குச் சொந்தமான நிலங்கள் மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக சிறிலங்காவின் அரச தலைவர் அனுரகுமார திசாநாயக்க 31.01.2025 அன்று நடைபெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், 26.04.2025 அன்று கிளிநொச்சியில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுக் கூட்டம், 01.09.2025 அன்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய பணிமனை திறப்பு விழா என முன்னரும் பின்னருமென அடுத்தடுத்து பல மேடைகளில் வாக்குறுதிகளை அள்ளி வீசியிருந்தார்.
என்.பி.பி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டுகளைக் கடந்துள்ளது. எனினும் தமது தேர்தல் அறிக்கைகள் மற்றும் மேடைகளில் “சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வோம்” என்ற வாக்குறுதியை தையிட்டி ஆக்கிரமிப்பு விகாரை விவகாரத்தில் நடைமுறைப்படுத்துவதற்கும், அநுர அவ்வப்போது மேடைகளில் முழங்கிய “மக்களின் நிலங்களை மக்களிற்கே வழங்குவோம்” என்ற வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கும் சித்தமின்றியிருக்கின்றது.
காணி உறுதிப் பத்திரங்களுடன் உரிமையாளர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் நிலத்தை ஆக்கிரமித்து விகாரை அமைக்கப்பட்டள்ளது. ஒரு புறம் அனுமதிகளற்ற கட்டுமானங்களிற்கு எதிராக வலி.வடக்கு பிரதேச சபையினர் தமது சட்டபூர்வ கடமைகளை ஆற்றுவதிலிருந்து தடுக்கப்பட்டிருக்கிறார்கள். ஆக்கிரமிப்பு விகாரையின் விகாராதிபதிக்கு புதிய பதவி உயர்வு. அண்மைய கைதுகள் நிலைமை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கியுள்ளது.

மக்களின் காணிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை சட்ட விரோதமானது என்றும், மக்களிடம் உறுதிப் பத்திரங்கள் உள்ளமையினை அறிந்தும் அது கட்டப்பட்டுள்ளது என்றும் நயினாதீவு நாக விகாரை விகாராதிபதி தனது எதிர்ப்பினையும் பதிவு செய்துள்ளார். இவ்வாறானதொரு சூழலில் விகாரையுள்ள பகுதியை ஆளுகை செய்யும் வலி. வடக்குப் பிரதேச சபையினால் சட்டவிரோத கட்டுமானம் என பிரகடனப்படுத்தி, மும்மொழிகளிலும் அறிவித்தல் பலகையை நாட்டுவதற்கும் தீரமானமும் நிறைவேற்றப்பட்டிருந்தது. அறிவித்தல் பலகையை நாட்டுவதற்குச் சென்ற பிரதேச சபையினரின் சட்டபூர்வக் கடமைக்கு இடையூறு விளைவித்த சிறிலங்கா காவல்துறையினரின் மீது இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பதும் நோக்கத்தக்கது.
சுமூகமான தீர்வினை எட்டுவதற்கு சிறிலங்காவின் புத்தசாசன அமைச்சினால் ஏற்பாடு செய்யபட்ட பேச்சுவார்த்தையின் போது “விகாரையை முழுமையாக அகற்றாமல் அதனைச் சூழவுள்ள காணிகளை விடுவிப்பதென்றும் விகாரையை இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து பௌத்த விவகாரத் திணைக்களத்தின் கீழ்க் கொண்டு வருவதென்றும் முன்மொழியப்பட்டது. நிலத்தின் உரிமையாளர்கள் “தமது பூர்வீக நிலம் முழுமையாக மீள ஒப்படைக்கப்பட வேண்டும்” என்பதில் உறுதியாக இருந்ததாலும், விகாரையை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையினாலும் உடன்பாடுகள் எவையும் எட்டப்படவில்லை.
மக்களின் நிலங்களை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட சட்டவிரோத விகாரைக்குப் பதிலாக தமிழ் மக்களிற்கு நட்டஈ:டு அல்லது மாற்றுக் காணி வழங்கவோ திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சந்திரசேகரனினால் 12.06.2025 அன்று நடைபெற்ற வலி. வடக்குப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இதனை யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் டிசம்பர் மாதக் கூட்டத்தில் விகாரையை இடிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அழுத்தமாகத் தெரிவித்து விட்டார்.
மாற்றுக் காணிகள் வழங்குவதென்பது காணி உரிமையாளர்கள் ஏற்றுக் கொள்ளாத வரைக்கும் நடக்கப் போவதில்லை. இந்த சிக்கல் நிலைமையைப் பொறுத்த வரையில் என்.பி.பி அரசின் முன்னால் இருப்பது இரண்டு அணுகுமுறைகள் மட்டும் தான்.
முதலாவது, சட்டத்திற்குப் புறம்பாக ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள விகாரையை இடித்து அகற்றி நிலத்தின் உரிமையாளர்களிடம் அவர்களின் நிலங்களை ஒப்படைத்து பிரச்சினையை தீர்த்து வைப்பது. ஆனால் அதற்கு தெற்கில் பாரிய எதிர்ப்புக்கள் எழும் என்பதோடு, சிங்கள - பௌத்த பேரினவாத மனோநிலை இடம் கொடுக்க வேண்டும்.
இரண்டாவது, விகாரையை அப்படியே இருக்கும் நிலையில் பேணுவது. சிங்கள பௌத்த நிலைப்பாட்டில் சிக்கலை அணுகுவது தான் என்.பி.பி அரசுக்கு மிகவும் வசதியானதொன்று. இது சட்டம், அறம் என்பவற்றை விட சிறிலங்கா அரச கட்டமைப்பில் சிங்கள பௌத்தவாதம் எவ்வளவு மேலானது என்பதை வெளிப்படுத்தும்.

தேசிய மக்கள் சக்தி அரசு நடைமுறையில் அந்த விகாரையை அகற்றப் போவதில்லை என்பது வெளிப்படை. அவர்களிற்கு முன்னால் உள்ள பெரும் சவால் காணி உரிமையாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களின் அறப் போராட்டங்கள். அவற்றின் கூட்டுப் பலத்தை இல்லாதொழிப்பதற்கு அனுர அரசு தற்போது தேர்ந்தெடுத்த வழி வெறும் 02 ஏக்கர் காணிகளை விடுவித்தல். இது நிலவுரிமைக்கான அந்த மக்களின் போராட்டங்களின் வீரியத்தை தணிப்பதற்கும், அவர்களை பிளவுபடுத்தி தனிமைப்படுத்தும் முதலாளித்துவ அரசுகளின் வழமையான உத்தி.
தமது ஆட்சிக் காலத்தில் தையிட்டி திஸ்ஸ விகாரை அமைக்கப்படவில்லை என்றும் அது தனியார் காணிகளில் அமைக்கப்பட்டுள்ளதை அமைச்சர் சந்திரசேகரன் ஏற்றுக் கொண்ட போதிலும், காணிகளை இழந்த மக்களுக்கு இழப்பீடுகளைப் பெற்றுக் கொடுப்பதே தமது அரசின் நிலைப்பாடு என்பதைத் தெரிவித்திருந்தார். ஊழல், கையூட்டு, போதை, சட்டத்தின் ஆட்சி என்பவற்றில் கடந்தகால அரசுகளின் அணுகுமுறைகள், மரபுகளில் மாற்றங்களை ஏற்படுத்துவோம் என்று என்.பி.பி சொன்னாலும் அவை தெற்கிற்குத் தான். வடக்கு - கிழக்கில் சட்டத்தின் ஆட்சியை நடைமுறைப்படுத்துவதில் சிங்கள பௌத்த பேரினவாத அணுகுமுறைக்கு அப்பால் இல்லை என்பதனை தையிட்டி விவகாரம் உறுதி செய்துள்ளது.
சட்டத்தின் ஆட்சியை நடைமுறைப்படுத்துவதாக ஆட்சிப் பொறுப்பேற்ற என்.பி.பி அரசாங்கம் சட்டத்திற்கு விரோதமாக நடைபெற்ற ஆக்கிரமிப்பினை முறைப்படுத்தி சட்டபூர்வமாக்குவதற்கான செயல்களில் ஈடுபடுகின்றமையினை சமீபகால நடவடிக்கைகள் வெளிப்படுத்துகின்றன. இடம்பெயர்ந்த மற்றும் அபகரிக்கப்பட்ட நிலங்களைக் கொண்ட தமிழர்களிடையே, எதிர்காலங்களில் இதனைப் போல் உரிய தீர்வு அல்லது நீதி இல்லாமல் தமது சிக்கல்களும் தீர்க்கப்படலாம் என்ற அச்சத்தினை எழுப்பியுள்ளது.
