இலங்கைத் தமிழர்களின் சம உரிமை மற்றும் கூடுதல் அரசியல் அதிகார எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்தேழாம் (1987) ஆண்டு உள்நாட்டுப் போரின் தொடக்கக் கட்டத்தில் கையெழுத்திடப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்ய, இந்தியாவின் தொடர்ச்சியான ஈடுபாட்டை இலங்கைத் தமிழ் கட்சிகள் கோரியுள்ளன.
இலங்கைக்கு இரண்டு நாள் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியத் துணைத் குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனை ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 19) சந்தித்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் தலைவர்கள் அடங்கிய குழுவினர் இதனைத் தெரிவித்தனர். ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்தேழாம் ஆண்டு ஜூலையில் அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் இலங்கைத் தலைவர் ஜே.ஆர். ஜெயவர்தன ஆகியோரால் கையெழுத்திடப்பட்ட இந்த "அரசுக்கு இடையிலான உடன்படிக்கையை" சுட்டிக்காட்டிய இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, ஒப்பந்தத்தின் உண்மையான நோக்கம் இன்னும் எட்டப்படவில்லை என்று குறிப்பிட்டது.
"இந்த ஒப்பந்தம் இதுவரை முழுமையாக நனவாகவில்லை என்பதையும், பதின்மூன்றாவது திருத்தம் கூட இன்னும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதையும் அவரிடம் தெரிவித்தோம். இலங்கையிலோ அல்லது இந்தியாவிலோ யார் ஆட்சிக்கு வந்தாலும், இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட வேண்டும். அது மாற்ற முடியாத அதிகாரப் பகிர்வுடன் கூடிய கூட்டாட்சி மாதிரியின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும் என வலியுறுத்தினோம்," என்று இச்சந்திப்பிற்குப் பிறகு 'தி இந்து' நாளிதழிடம் பேசிய இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், யாழ்ப்பாண முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
இரண்டாயிரத்து ஒன்பதாம் (2009) ஆண்டு மே மாதம் உள்நாட்டுப் போர் முடிவடைந்ததிலிருந்து, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மற்றும் அது முன்னர் தலைமை தாங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவை "ஒன்றுபட்ட, பிரிக்க முடியாத" இலங்கைக்குள் பதின்மூன்றாவது திருத்தத்தின் வழியாகப் பொருள் பொதிந்த அதிகாரப் பகிர்வைத் தொடர்ந்து கோரி வருகின்றன. பதின்மூன்றாவது திருத்தமானது இந்த ஒப்பந்தத்தின் விளைவாக உருவானது என்றாலும், கடந்த நான்கு பத்தாண்டுகளாகக் கொழும்பில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் நிலம் மற்றும் காவல் அதிகாரங்களை வழங்க மறுத்து வருகின்றன. மேலும், வடக்கு - கிழக்கு இணைப்பு போன்ற ஒப்பந்தத்தின் முதன்மை முன்மொழிவுகளையும் நிராகரித்து வருகின்றன.
"மாகாண சபைகள் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக முடங்கிக் கிடப்பதை நாங்கள் சுட்டிக்காட்டியபோது, மாகாண சபைத் தேர்தல்களை விரைவில் நடத்துவது குறித்து இலங்கைத் தரப்புடன் பேசியுள்ளதாகத் துணைத் குடியரசுத் தலைவர் எங்களிடம் கூறினார். அதிகாரப் பகிர்வு குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் உறுதியளித்தார்," என்று சுமந்திரன் கூறினார்.
இந்தியாவின் வளர்ச்சி ஒத்துழைப்பு மற்றும் முன்னுரிமைகளுக்கு இடையில், இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இந்தியாவின் ஆர்வம் குறைந்து வருவதாக கடந்த பத்தாண்டுகளாகத் தமிழ் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். இதற்கிடையில், இந்தியத் தலைவர்களைச் சந்திக்கும் போதெல்லாம் தமிழ் அரசியல் கட்சிகள் இந்தக் கவலையை முன்வைக்கின்றன. மறைந்த மூத்த தமிழ் தலைவர் ஆர். சம்பந்தன் இரண்டாயிரத்து இருபத்திரண்டாம் (2022) ஆண்டில் 'தி இந்து' நாளிதழிடம் பேசுகையில், தீவின் தமிழ் மக்களின் சிக்கலுக்குத் தீர்வு காணப்படுவதை உறுதி செய்வதில் இந்தியாவிற்குச் "சிறப்புக் கடமை" இருப்பதாகக் கூறியிருந்தார்.
அதிகாரப் பகிர்வுக்காக இந்தியாவின் கூடுதல் அழுத்தத்தைக் கோரிய அதே வேளையில், பிரதமர் நரேந்திர மோடி இரண்டாயிரத்து பதினைந்தாம் (2015) ஆண்டு மார்ச் மாதம் இலங்கை நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் தான் "கூட்டுறவு கூட்டாட்சியில்" உறுதியான நம்பிக்கை கொண்டவர் என்று கூறியதை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் நினைவு கூர்ந்தார். அதேசமயம், இலங்கையின் ஒற்றையாட்சி கட்டமைப்பிற்குள் முறையான அதிகாரப் பகிர்வு சாத்தியமில்லை என்ற தங்களது நிலைப்பாட்டை விளக்கும் ஆவணத்தைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் இந்தியத் துணைத் குடியரசுத் தலைவரிடம் ஒப்படைத்தார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி பேசுகையில், தமிழ் தலைவர்களுடனான சந்திப்பில் போருக்குப் பிந்தைய சிக்கல்களான நிலம் மற்றும் சொத்து உரிமைகளை மீட்டெடுப்பது குறித்துக் கவனம் செலுத்தப்பட்டதாகக் கூறினார். மேலும், அதிகாரப் பகிர்வு மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது குறித்தும் பேசப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இடதுசாரிக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி வரலாற்று ரீதியாக இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை இந்தியா திணித்த ஒன்றாகக் கருதி எதிர்த்து வந்தாலும், அது தலைமை தாங்கும் தற்போதைய தேசிய மக்கள் சக்திக் கூட்டணி, தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை உள்ளடக்கிய புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதாக உறுதியளித்துள்ளது. இருப்பினும், இதற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை, அதற்கான காலக்கெடுவும் அறிவிக்கப்படவில்லை.
தமிழ் கட்சிகளும் இந்தியத் துணைத் குடியரசுத் தலைவரும் வளர்ச்சித் திட்டங்களுக்கான இந்திய உதவி, நீடிக்கும் மீனவர் சிக்கல் மற்றும் இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவது குறித்தும் கலந்துரையாடினர். அகதிகள் திரும்புவது குறித்த கேள்விக்குப் பதிலளித்த ராதாகிருஷ்ணன், "அவர்களை அங்கேயே பராமரிக்க இந்தியா எப்படியும் செலவு செய்கிறது, எனவே அவர்கள் இங்கு வரும்போது வீடு மற்றும் பிற தேவைகளுடன் அவர்களை நிலைநிறுத்த அந்த நிதியைப் பயன்படுத்தலாம்," என்று கூறியதாகச் சுமந்திரன் தெரிவித்தார். மேலும், இலங்கையில் தமிழர்களின் மக்கள் தொகை மேலும் குறைந்துவிடக் கூடாது என்பதில் இந்தியா அக்கறையுடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தி இந்து (The Hindu) ஊடகத்தில் மீரா ஸ்ரீனிவாசனால் எழுதப்பட்ட ஆங்கில மூலக் கட்டுரையானது மூத்த ஊடகவியலாளர் திரு. ரஜீவன் அவர்களினால் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டது.
ஆங்கில மூலம் : Sri Lanka’s Tamil parties seek sustained Indian push to realise spirit of Indo-Lanka Accord