இந்தியத் துணைத் தலைவர் சி.பி. இராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 19) இலங்கையை வந்தடையும் போது, 1987-ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான இருதரப்பு உடன்படிக்கையின் ஒரு அங்கமான, நீண்டகாலமாகத் தாமதப்படுத்தப்பட்டு வரும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துமாறு கொழும்புக்கு இராஜதந்திர அழுத்தம் கொடுக்குமாறு ஈழத்தமிழ் தலைவர்கள் அவரிடம் வலியுறுத்த உள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமையன்று கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தினால் இராதாகிருஷ்ணனுடன் கலந்துரையாட அழைக்கப்பட்டிருக்கும் தலைவர்களில் சிலர், இலங்கை தன்னாட்சி அதிகாரங்களை வழங்கும் மாகாணசபை தேர்தல்களை நடத்துவதிலிருந்து நழுவ முயற்சிப்பதாகக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தவுள்ளனர்.
அதே சமயம், தேயிலைத் தோட்டங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்களாக வந்து குடியேறிய இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் தலைவர்கள், கடந்த ஆண்டு செப்டம்பரில் பதவியேற்ற துணைத் தலைவரிடம் தங்களது தனித்துவமான கோரிக்கைகளை முன்வைக்கவுள்ளனர்.
இந்திய உதவித் திட்டங்கள் குறித்து துணைத் தலைவர் ஆலோசனை
தனது இரண்டு நாள் பயணத்தின் போது, தமிழ்நாட்டில் இருந்து அரசியலைத் தொடங்கி இலங்கை விவகாரங்களை நன்கு அறிந்த இராதாகிருஷ்ணன், அந்நாட்டின் உயர்மட்டத் தலைவர்களைச் சந்தித்து இந்தியா நிதியுதவி வழங்கும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விவாதிக்கவுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் வரும் அவர், சிறிலங்கா அரச தலைவர் அநுர குமார திஸாநாயக்கவைச் சந்திப்பதுடன், சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரையும் சந்திப்பார். மருத்துவம், கட்டமைப்பு, எரிசக்தி மற்றும் சமூக மேம்பாடு ஆகிய துறைகளில் இந்தியாவின் ஆதரவுடன் நடைபெறும் திட்டங்கள் குறித்து இந்தியத் தலைவர் விரிவான மதிப்பீட்டைச் செய்வார் என்று சிறிலங்கா வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஏற்கனவே அறிவித்துள்ளார்.
இந்த வருகையின் போது இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்தும் வகையில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு மாறாக, இராதாகிருஷ்ணன் வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச் செல்லமாட்டார். அவர் கொழும்பிலேயே தங்கியிருப்பார்; அங்கேயே தமிழ் அரசியல் தலைவர்கள் அவரைச் சந்திப்பார்கள்.
"அரசாங்கங்கள் வரலாம் போகலாம், ஆனால் 1987 உடன்படிக்கையை இரு நாடுகளும் மதிக்க வேண்டும்," என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். "நாற்பது ஆண்டுகள் கடந்தும் அந்த ஒப்பந்தம் இன்னும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. மாகாண சபைகள் இயங்கவில்லை. தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுகின்றன. முதல் கட்டமாக, தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார்.
இராதாகிருஷ்ணன் மீது தமிழ் தலைவர்கள் வைத்துள்ள நம்பிக்கை
தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக வசிக்கும் ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டியதன் அவசியம் குறித்து இராதாகிருஷ்ணன் ஏற்கனவே பேசியுள்ளதால், அவர் தங்களது விருப்பங்களைச் சிறப்பாகப் புரிந்துகொள்வார் என்று தமிழ் தலைவர்கள் கருதுகின்றனர்.
வடக்கு மற்றும் கிழக்கில் வசிக்கும் ஈழத் தமிழர்களுக்கு மாறாக, 15 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட இந்திய வம்சாவளித் தமிழர்களின் தலைவர்கள், மொரிஷியஸில் உள்ள இந்திய வம்சாவளியினருக்கு வழங்கப்படுவதைப் போல, தகுதியுள்ள அனைவருக்கும் 'இந்திய வெளிநாட்டு குடியுரிமை' தகுதியை வழங்க வேண்டும் எனக் கோரவுள்ளனர்.
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் துணைத் தலைவர் பரத் அருட்சாமி கூறுகையில், இலங்கையின் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள தங்களது சமூகத்திற்குத் தனிப்பயன்படும் வகையில் கல்வி, தொழில் பயிற்சி மற்றும் தொழில்முனைவோர் பயிற்சிகளை இந்தியா வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.
தமிழகத் தேர்தலை முன்னிட்டு இந்தப் பயணமா?
தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டே இராதாகிருஷ்ணனின் இந்தப் பயணம் திட்டமிடப்பட்டிருக்கலாம் என ஒரு தரப்பினர் கருதுகின்றனர். இருப்பினும், குடியரசுத் தலைவரின் பிரதிநிதியாக வரும் ஒரு தமிழ்ப் பேசும் தலைவர், இலங்கையில் நிலவும் இனரீதியான கவலைகளை இந்தியத் தலைமையிடம் கொண்டு சேர்க்கச் சரியான நபராக இருப்பார் எனத் தமிழ் அரசியல்வாதிகள் நம்புகின்றனர்.
ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன் கூறுகையில், "இலங்கைத் தமிழ் சமூகத்தின் மீது இந்தியாவிற்கு ஒரு கடமை இருக்கிறது. புதிய அரசாங்கம் ஈழத்தமிழ் விவகாரங்களில் உண்மையான அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை," எனத் தெரிவித்தார். மேலும், 1987 உடன்படிக்கையைத் தீவிரமாக எதிர்த்த மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தலைமையிலான அரசாங்கம், தமிழ் மக்களுக்கான தீர்வுகளை வழங்குவதில் மிகவும் கடுமையான போக்கைக் கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழர் விவகாரங்களில் புதிய அரசு அக்கறையின்றிச் செயற்படுகிறது!
சிறிலங்கா அரச தலைவர் திஸாநாயக்கவின் அரசாங்கம் குறித்துக் குறிப்பிட்ட சித்தார்த்தன், "புதிய அரசாங்கம் தமிழ் விவகாரங்களில் உண்மையான அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை. தமிழ் தேசியப் பிரச்சினை என்று வரும்போது அவர்கள் முந்தைய அரசாங்கங்களைப் போலவே இருக்கிறார்கள்" என்று கூறினார்.
தமிழ் மக்களுக்கு ஓரளவிற்குத் தன்னாட்சியை வழங்க முயன்ற 1987-ஆம் ஆண்டு உடன்படிக்கையை மிகக் கடுமையாக விமர்சித்தது திஸாநாயக்கவின் மக்கள் விடுதலை முன்னணி என்பதை அவர் சுட்டிக்காட்டினார். அந்த ஒப்பந்தத்தை முடக்குவதற்கு நாட்டிலேயே மற்றெவரையும் விட அவர்கள் அதிக முயற்சி எடுத்தனர் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு மாகாணத்தில் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி பெற்ற வியக்கத்தக்க வெற்றி, இலங்கையில் பாரம்பரிய தமிழ் அரசியல் கட்சிகள் இனி ஒரு முக்கிய சக்தியல்ல என்ற எண்ணத்தை இராதாகிருஷ்ணனுக்கு ஏற்படுத்திவிடக் கூடாது எனத் தமிழ் தலைவர்கள் விரும்புகிறார்கள்.
"ஆம், மக்கள் விடுதலை முன்னணி குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றது; இதற்கு எமது ஒற்றுமையின்மை உட்பட பல காரணங்கள் உள்ளன," என்று சித்தார்த்தன் கூறினார். "அவர்கள் தமிழ் சமூகத்திற்கு ஒருபோதும் உண்மையான சலுகைகளை வழங்க மாட்டார்கள் என்பதை தமிழ் மக்கள் உணர்ந்து வருகின்றனர். தமிழ் விவகாரத்தைப் பொறுத்தவரை இது மிகவும் தீவிரப்போக்குடைய ஒரு கட்சியாகும்."
தற்போதைய சிறிலங்கா அரச தலைவர் திஸாநாயக்கவின் நீண்டகால நண்பரான சுமந்திரன், தமிழ் பகுதிகளில் தன்னாட்சிக் கோரிக்கையில் எந்த மாற்றமும் இல்லை என்பதையும், இந்த விவகாரம் தமிழ் மக்களிடையே தொடர்ந்து எதிரொலித்து வருவதையும் தெளிவாகக் குறிப்பிட்டார். "தன்னாட்சி என்ற விவகாரத்தில் எவ்வித சமரசமும் செய்து கொள்ள முடியாது" என சுமந்திரன் தெரிவித்தார்.
தி பெடரல் (The Federal) ஊடகத்தில் வெளிவந்த ஆங்கில மூலக் கட்டுரையானது மூத்த ஊடகவியலாளர் திரு. ரஜீவன் அவர்களினால் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டது.