தையிட்டி சட்டவிரோத விகாரை: நிலங்களை மீட்க ஆவணங்களுடன் முன்வாருங்கள் - உரிமையாளர் அழைப்பு!
தையிட்டி சட்டவிரோத விகாரைப் பகுதியில் உங்களது காணிகள் (நிலங்கள்) எல்லைப்படுத்தப்பட்டிருந்தால், அனைவரும் அவற்றை மீட்க முன்வர வேண்டும். இல்லையென்றால் அக்காணிகளை விடுவிப்பதற்கு இன்னுமொரு பத்தாண்டுக் காலம் ஆகலாம் எனக் காணி உரிமையாளர்களில் ஒருவரான சாருசன் சுகுமாரி தெரிவித்துள்ளார். உங்களிடம் நிலத்திற்கான உறுதிப்பத்திரங்கள் இருந்தால், தயங்காமல் அதனை வெளிப்படுத்துங்கள் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தையிட்டி ஆக்கிரமிப்பு விகாரையினால் காணிகளை இழந்தவர்களுடன் சிறிலங்காவின் கடற்றொழில் அமைச்சர் இ. சந்திரசேகரன், யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் ம. பிரதீபன் மற்றும் நில அளவையாளர்கள் குழுவினர் கலந்துகொண்ட கூட்டம் கடந்த 11.04.2026 (சனிக்கிழமை) நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைவரது நிலங்களையும் அளவீடு செய்து விடுவிப்பதென அரசுப் பிரதிநிதிகளால் தெரிவிக்கப்பட்டது. இச்சந்திப்பின் பின்னரே காணி உரிமையாளர்களில் ஒருவரான சாருசன் சுகுமாரி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "எங்களிடம் 17 பேருடைய உறுதிப்பத்திரங்கள் மட்டுமே உள்ளன. 17 பேரால் மட்டுமே காணிகளை அடையாளம் காணக்கூடிய நிலை உள்ளது. அந்த 17 பேருடைய எல்லைகள் காண்பிக்கப்படும் போது, அவர்களின் காணிகளை மட்டுமே விடுவிக்கப் போகின்றோம் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

அந்த இடத்தில் 150 பரப்பு நிலம் இருக்கும் என நாங்கள் கருதுகிறோம்; அதற்குக் கூடுதலாகவும் காணிகள் இருக்கலாம். ஆனால், ஆவணங்கள் காண்பிக்கப்படும் காணிகளை மட்டுமே விடுவிப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
முப்பது ஆண்டுகளாக நாங்கள் அந்த இடத்தில் இல்லை. தாய், தந்தை இறந்த பிள்ளைகளுக்கு அந்த இடத்தில் காணிகள் இருக்கின்ற செய்தியே தெரியாமல் இருந்திருக்கலாம்; உறுதிப்பத்திரங்கள் கூட அவர்களிடம் இல்லாமல் இருக்கலாம். அப்படியான காணிகளை நில எடுப்பு (சுவீகரிப்பு) மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ விகாரையின் முதன்மைப் பிக்கு கைப்பற்றுவதற்கான வாய்ப்பு உள்ளதைக் கருத்தில் கொண்டு நாங்கள் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினோம். அதற்குப் பதிலளித்த அவர்கள், 'அவ்வாறில்லை, எப்போதாவது அந்தக் காணி உரிமையாளர்கள் உரிமை கோரும் போது, அக்காணிகளை அளவீடு செய்து விடுவிப்போம்' எனக் கூறுகின்றனர்.
இதன் காரணமாகத் தையிட்டியைச் சேர்ந்த மக்களிடம் நான் விடுக்கும் கோரிக்கை என்னவென்றால், இவ்வளவு காலமும் சிலவேளை அச்சத்தினால் கூட நீங்கள் உறுதிப்பத்திரங்கள் இருப்பதை வெளிப்படுத்தாமல் இருந்திருக்கலாம். உங்களது காணிகள் அந்த விகாரைப் பகுதியில் எல்லைப்படுத்தப்பட்டிருந்தால், அனைவரும் அவற்றை மீட்க முன்வர வேண்டும். இல்லையென்றால் அந்தக் காணிகளை விடுவிக்க இன்னுமொரு பத்தாண்டுக் காலம் செல்லக்கூடும். அல்லது, அந்தப் பகுதியில் கூடச் சட்டத்திற்குப் புறம்பான கட்டுமானங்களும் விகாரைகளும் எழுவதற்கான வாய்ப்புள்ளது.
நாங்கள் எமது காணிகளை மீட்கும் போது, அவர்கள் ஆவேசமடைந்து மற்றக் காணிகளைக் கைப்பற்றக் கூடும். இதன் காரணமாக உங்களிடம் உறுதிப்பத்திரங்கள் இருந்தால், அனைவரும் அதனை வெளிப்படுத்த வேண்டும்; இது எங்களின் கடமையுமாகும்" என்று சாருசன் சுகுமாரி வலியுறுத்தினார்.


