"வடக்கு ஆளுநரை மாற்றினாலே கல்வியில் முன்னேற்றம்!" - இடமாற்ற முறைக்கு எதிராக யாழில் ஆசிரியர்கள் போராட்டம்
ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பான கோரிக்கையை மாகாணக் கல்வித் திணைக்களம் மீளாய்வு செய்யாமல், மீண்டும் மீண்டும் ஒரே ஆசிரியர்களுக்கே இடமாற்றம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகக் குற்றம் சாட்டி, வடக்கு மாகாணப் பொதுச் சேவைகள் ஆணைக்குழுவிற்கு முன்பாக ஆசிரியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தின் போது ஆசிரியர்கள் பலர் ஒன்றுகூடி, பல்வேறு கோரிக்கைகள் எழுதப்பட்ட பதாகைகளைத் (எழுத்துத் தட்டிகளை) தாங்கியவாறு முழக்கங்களை எழுப்பினர். தாங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் தொடர்பில் மாகாணக் கல்வித் திணைக்களத்திற்கு மேல்முறையீடு செய்தும், அந்த முறையீட்டைப் பொதுச் சேவைகள் ஆணைக்குழுவுக்குக் கல்வித் திணைக்களம் வழங்கவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஆசிரியர் கூட்டமைப்பைச் சேர்ந்த சிலர் வடமாகாணப் பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் திரு. ஆழ்வார்பிள்ளை சிறீயைச் சந்தித்துக் கலந்துரையாடினர். அதன்பின்னர், குறித்த ஆசிரியர்கள் வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாகவும் தமது போராட்டத்தை முன்னெடுத்தனர்.
தமது மேல்முறையீடு ஆராயப்பட்டுத் தகுந்த தீர்வு கிடைக்கும் வரை, தாம் தற்போது பணியாற்றும் பள்ளியிலேயே தொடர்ந்து பணியாற்ற இசைவு வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தினர். அவ்வாறு இசைவு வழங்கப்படாத நிலையில், தமது போராட்டங்கள் பல்வேறு வடிவங்களில் தொடரும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
