பெண்களைக் கொன்றவர்களுக்குத் துணைபோகாதே! - மட்டக்களப்பில் மக்கள் போராட்டம்!
மட்டக்களப்பில் நடைபெற்ற கொள்ளை மற்றும் கொலை நிகழ்வுகளுடன் தொடர்புடைய குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வழக்குரைஞர்கள் எவரும் வழக்காடக் கூடாது என்பதை வலியுறுத்தியும், இந்நிகழ்வில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டுமாறு கோரியும் இன்று கொக்கட்டிச்சோலை நகரில் கவன ஈர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மண்முனை தென்மேற்குப் பிரதேச சபைத் தவிசாளர் இளையதம்பி கிரேஸ்குமாரன் தலைமையில், மண்முனை தென்மேற்குப் பிரதேச முச்சக்கர வண்டி உரிமையாளர் நலன்புரிக் கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் இப்போராட்டம் நடைபெற்றது.
கடந்த 20 ஆம் நாள் கொக்கட்டிச்சோலைக் காவல் பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து பெண் ஒருவர் உயிருடனும், மற்றொரு பெண்ணின் உடலமும் மீட்கப்பட்ட நிகழ்வைத் தொடர்ந்து, மட்டக்களப்பில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த பெரும் கொள்ளை நிகழ்வுகளும், அத்துடன் தொடர்புடைய கொலைகளும் கண்டுபிடிக்கப்பட்டன. இது தொடர்பாக மூன்று முதன்மைக் குற்றவாளிகள் உட்பட ஐந்து பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
கடந்த மார்ச் 23 ஆம் நாள் மட்டக்களப்பு நீதிவான் முன்னிலையில் இவர்கள் நிறுத்தப்பட்டனர். இவர்களில் மூன்று முதன்மைக் குற்றவாளிகளையும் நான்கு நாள்கள் காவல் துறையினரின் காவலில் வைத்துப் புலனாய்வு செய்வதற்கும், ஏனைய இருவரை வருகின்ற 27 ஆம் நாள் வரை நீதிமன்றக் காவலில் வைப்பதற்கும் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

நாளை (27 ஆம் நாள்) இவ்வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், இத்தகைய கொடூரங்களை நிகழ்த்திய குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வழக்குரைஞர்கள் எவரும் வழக்காடக் கூடாது எனவும், குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், மாவட்டத்தில் இனிமேல் இவ்வாறான குற்றங்கள் நடைபெறாத வண்ணம் காவல்துறையினர் விரைந்து நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, 'துணைபோகாதே, துணைபோகாதே, கொலைக் குற்றவாளிகளுக்குத் துணை போகாதே!', 'போராடுவோம், போராடுவோம், நீதி கிடைக்கும் வரை போராடுவோம்!', 'பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும்!', 'நீதியை நிலைநாட்ட அநீதிக்கு எதிராகக் கிளர்ந்தெழுவோம்!', 'கை வைக்காதே, கை வைக்காதே, பெண்கள் மீதும் சிறுவர்கள் மீதும் கை வைக்காதே!', 'விரைவாக நீதியை வழங்கு!' போன்ற முழக்கங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு, கொக்கட்டிச்சோலை பட்டிப்பளைச் சந்திப்பில் இருந்து பிரதேச சபை வரை பேரணி நடைபெற்றது. பின்னர், பிரதேச சபையின் முன்பாகக் கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டது.
இப்போராட்டத்தில் பிரதேச சபைத் தவிசாளர், பிரதித் தவிசாளர், உறுப்பினர்கள், முச்சக்கர வண்டி ஓட்டுநர் சங்கப் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


