செவ்வாய், 24 மார்ச், 2026
|
கருத்துக்கள்

அரச பயங்கரவாதத்திற்கு சட்ட முலாமிடும் புதிய பயங்கரவாதத் தடைச் சட்டம் ?

தமது தாய்நிலம் ஆக்கிரமிக்கப்படுகின்றதென்ற தமிழ் இளந்தலைமுறையின் உணர்ந்தறிதல் தான் அடக்குமுறைக்கெதிரான எதிர்ப்பியக்கங்களிற்கு இட்டுச் சென்றது. சமத்துவமற்ற அதிகாரத்தளத்தில் கூட்டு ஆக்கிரமிப்பிற்கு எதிராக உருக்கொண்ட தமிழர்களின் போராட்டத்தை பயங்கரவாதமாக கட்டமைத்தது சிறிலங்கா அரசு.

அரச பயங்கரவாதத்திற்கு சட்ட முலாமிடும் புதிய பயங்கரவாதத் தடைச் சட்டம் ?
தமிழேந்தி
தமிழேந்தி

மார்ச் 24, 2026 · 3 நிமிட வாசிப்பு

ஆட்சிப் பொறுப்பேற்பதற்கு முன்னர், ‘பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவோம்! அது சனநாயகத்திற்கு ஆபத்தானது!’ என்று பேரறிவிப்புச் செய்த என்.பி.பி ஆட்சிக்கு வயது ஒராண்டும் ஐந்து மாதங்களும். அதோ நீக்குகின்றோம்! இதோ நீக்குகின்றோம்! என்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 2025ஆம் ஆண்டு கூட்டத்தொடரை சமாளிப்பதற்காக செப்டெம்பர் மாதம் நீக்கிவிடுவோம் என்று அறிவித்தார்கள் ஐ.நா கூட்டத்தொடரும் நிறைவடைந்து விட்டது தொடக்கிய இடத்தில் தான் PTA இருக்கிறது. ஆனால் வருகிறது புதிய சட்டம் !

தமிழர்கள் மீதான இன ஒடுக்குமுறை மற்றும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை என்பவற்றின் நீட்சியாக தன்னாட்சியுரிமைக்கான தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் முயற்சியாக ஜே.ஆர் ஜெயவர்த்தன அரசினால் தற்காலிகச் சட்டமாக கொண்டு வரப்பட்டு பின் நிதந்தரமாக்கப்பட்டது தான் சிறிலங்காவில் நடைமுறையிலிருக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டம்.

தமது தாய்நிலம் ஆக்கிரமிக்கப்படுகின்றதென்ற தமிழ் இளந்தலைமுறையின் உணர்ந்தறிதல் தான் அடக்குமுறைக்கெதிரான எதிர்ப்பியக்கங்களிற்கு இட்டுச் சென்றது. சமத்துவமற்ற அதிகாரத்தளத்தில் கூட்டு ஆக்கிரமிப்பிற்கு எதிராக உருக்கொண்ட தமிழர்களின் போராட்டத்தை பயங்கரவாதமாக கட்டமைத்தது சிறிலங்கா அரசு. காந்தி, நெல்சன் மண்டேலா, பாலத்தீனர்கள் மேற்கொள்ளும் போது உரிமைக்கான விடுதலைப் போராட்டங்கள்; அதுவே தமிழர்கள் மேற்கொள்ளும் போது மட்டும் பயங்கரவாதமாகத் தெரிந்தது ஏன்? என்பது வேறு கதை.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை ஈழ விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குவதற்கான கருவியாகப் பயன்படுத்திய சிறிலங்கா அரசினால் இலக்கு வைக்கப்பட்டவர்கள் தமிழர்களே! 2009 இல் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டதன் பின்னரும், சமூக வலைத்தளப் பதிவுகள், நினைவேந்தல்கள், சனநாயக வழி எதிர்ப்பியக்கச் செயற்பாடுகளிற்காக தொடர்ந்தும் தமிழர் மீது பயங்கரவாதத் தடைச்சட்டம் பிரயோகிக்கப்படுகின்றதென்றால் அதன் நோக்கம் தெளிவானது. ஆயுதங்கள் தான் மௌனிக்கப்பட்டுள்ளனவே தவிர, ஒடுக்குமுறைகளும், கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையும் தடையின்றித் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இவற்றின் காரணமாக அதற்கெதிரான எதிர்ப்பியக்கங்கள், தன்னாட்சியுமைக்கான தமிழர்களின் வேட்கை என்பவற்றிற்கான அடிப்படைகள் இன்னமும் தொடர்கின்றன.

நடைமுறையிலுள்ள PTA மற்றும் ரணில் ஆட்சியில் வரையப்பட்ட ATA சட்ட வரைபு என்பவற்றுடன் ஒப்பிடுகையில் என்.பி.பி அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள PSTA சட்ட வரைபு அடிப்படையில் பெரிய வேறுபாடுகளைக் கொண்டதோ, முற்போக்கானதோ அல்ல! மாறாக அடிப்படை உரிமைகளை மறுத்து, சனநாய வெளியை இராணுவமயமாக்குவதையும், இனத்துவ அரசை வலுப்படுத்தவதை நோக்காகவும் கொண்டுள்ளது.

பயங்கரவாதம் என்பதற்கு உலகளாவிய வரைவிலக்கணமொன்று இல்லாத நிலையில், என்.பி.பி அரசாங்கம் அதனை வரைவிலக்கணப்படுத்தியுள்ளது. ஒரு செயலைச் செய்யுமாறு அல்லது செய்யாதிருக்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பது பயங்கரவாதச் செயலாக பிரிவு 3 (1) (C) யில் வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளது. சனநாயகபூர்வ நாடொன்றில் தேர்வு செய்யப்பட்ட அரசாங்கத்திற்குச் சரியானதொன்றிற்காக அழுத்தம் கொடுத்தல், பணிப்புறக்கணிப்பு, போராடுதல் என்பவை சனநாயகத்தின் பண்புகளும் அடிப்படை உரிமைகளுமாகும்.

ஆபத்தொன்று நிகழலாம் என்று காவல்துறை அதிகாரி முன்கணிக்குமிடத்து எந்தவொரு போராட்டம், பொதுக்கூட்டம், பேரணி, ஒன்றுகூடல்கள் உட்பட எந்தவொரு செயலொன்றையும் நிறுத்துமாறு கோரலாம் என்று பிரிவு 51 (1) அதிகாரமளிக்கின்றது. முன்கணிப்பு மற்றும் எந்தவொரு செயலொன்றையும் தடுக்கலாம் என்பவை அரசாங்கத்திற்கு எதிரான எந்தவொரு செயலையும் பயங்கரவாதமாக வரைவிலக்கணப்படுத்துவதற்கான ஏதுநிலையினை தோற்றுவித்துள்ளன. இவற்றை முன் கணிக்கும் அதிகாரம் கொண்டவர்களின் தகைமை, சனநாயக முதிர்வு, நோக்குநிலை, நலன்கள் என்பவை எவ்வித தர வரையறைகளுமற்றிருப்பது மிகவும் ஆபத்தானதும், சனநாயக விரோதமானதுமாகும்.

சந்தேகநபரொருவரைக் கைது செய்யவும், பொருட்களைக் கைப்பற்றவும் காவல் துறையினருக்கு மட்டுமே தற்போதுள்ள சட்டத்தில் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. புதிய சட்டத்தில் முப்படையினருக்கும் கடலோர காவற்படையினருக்கும் அவ்வதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவசரகாலச் சட்டத்தில் மட்டுமே வழங்கப்படும் இந்த அதிகாரங்களை நிரந்தரமாகவே படைத்தரப்புக்களிற்கு வழங்குவதற்கு என்.பி.பியின் புதிய சட்டம் முன்வருகின்றது.

புதிய சட்டம் கைது செய்யப்பட்டவர்களைப் பிணையின்றி ஒராண்டு வரையும், நீதிமன்ற ஒப்புதல்களுடன் இரண்டு ஆண்டுகள் வரையும் தடுப்பில் வைத்திருப்பதற்கு சிறிலங்கா காவல்துறைக்கு அதிகாரமளித்துள்ளது. சாதாரண குற்றவியற் சட்டங்களின் கீழான குற்றங்களை பயங்கரவாதச் செயலொன்றாக திரிபுபடுத்துவதனூடாக இச்சட்டத்தை சாதாரண குற்றச் செயல்களின் மீதும் பிரயோகிக்கும் வாய்ப்புள்ளது. நடப்பிலுள்ள பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் இவ்வாறு எண்ணற்ற அத்துமீறல்கள் நடந்தமை தமிழ் மக்களுக்குத் தெளிவாகத் தெரியும்.

எந்தவொரு நிறுவனம் அல்லது அமைப்பினை காலவரையறையின்றித் தடை செய்ய சிறிலங்கா அரச தலைவருக்கு அதிகாரமளிப்பதோடு, எந்தவொரு இடத்தினையும் தடைசெய்யப்பட்ட இடமொன்றாகப் பிரகடனப்படுத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிற்கு இச்சட்டம் அதிகாரமளிக்கிறது. ஒருவருடைய வாழிடத்திற்கு வெளியிலான நடமாட்டம், நாட்டிற்குள்ளான நடமாட்டம், வெளிநாட்டுப் பயணம் என்பவற்றை கட்டுப்படுத்துமாறு நீதிமன்றத்திடம் கோருவதற்கு காவல்துறைக்கு அதிகாரமளிக்கின்றது.

அவசரகால நிலைகளின் போது மட்டும் மேற்கொள்ளக் கூடிய விடயங்கள் பலவும், புதிய சட்டத்தின் கீழ் நிரந்தரமாகப் பிரயோகிக்கப்படக் கூடியவாறு இயல்பாக்கப்படுகின்றது. எந்தவொரு குற்றத்தையும் சாதாரண குற்றவியற் சட்டங்களின் கீழ் கையாள்வதற்குப் போதிய ஏற்பாடுகள் காணப்படுகின்ற நிலையில் புதிய சட்டங்கள் அவசியமற்றவை. மனித உரிமைகளிற்கான உலகளாவியப் பிரகடனம் மற்றும் சிறிலங்காவின் ஒற்றையாட்சி அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அத்தியாயம் என்பவற்றிற்கு முரணாகத் தான் வலுவிலுள்ள மற்றும் புதிய சட்டங்கள் காணப்படுகின்றமை நோக்கத்தக்கது.

பயங்கரவாதத்திலிருந்து நாட்டைத் தான் பாதுகாப்பார்கள் ஆனால் இங்கு அரசைப் பாதுகாக்க வேண்டும் என்கிறது புதிய சட்டம். ‘கோட்டா கே கம’ போன்ற அரகலய போராட்டம் ஒன்றின் ஊடாக என்.பி.பி அரசை அகற்றி விடக்கூடாதென்ற தூர நோக்கைச் சொல்லாமற் சொல்கின்றது. ஆட்சிக்கு வருவதற்கு முன் தவறாகப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம், தற்பொழுது என்.பி.பியினாலும் பிரயோகிக்கப்படுகின்றதென்றால் அதன் ருசியை தற்போது தான் ஆட்சியாளர்கள் அனுபவிக்கின்றனர் என்ற முடிவுக்கே நாம் வரவேண்டியிருக்கிறது.

தமிழினவழிப்பின் விளைவான பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் நீட்சியான புதிய சட்டம் ஒருபோதும் தமிழர்கள் விடயத்தில் மட்டும் தனது பண்பினை மாற்றிக் கொள்ளப் போவதில்லை. முன்னரே சொன்னது போல் அதன் நோக்கம் தெளிவானது. எந்தவொரு சிறிலங்கா ஆட்சியாளர்களும்; தமிழர்கள் மீதான மேலாதிக்கத்திற்கு விரோதமாக சிங்கள - பௌத்த இனத்துவ அரசின் எந்த நோக்கத்தையும் பலவீனப்படுத்தப் போவதில்லை என்பதில் எமக்கு வேண்டும் தெளிவு!

செய்திமடல் பதிவு

முரண்செய் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்.