சனி, 21 மார்ச், 2026
|
ஆய்வுகள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்: பன்னாட்டு விசாரணைக்கு சிறிலங்கா அரசு மறுப்பு !

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்: பன்னாட்டு விசாரணைக்கு சிறிலங்கா அரசு மறுப்பு !

சர்வதேச விசாரணைக்கு திட்டவட்டமான மறுப்பு

சிறலங்கா படைத்தரப்புக்களால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்கள் தொடர்பில் எவ்விதமான பன்னாட்டு விசாரணைகளையும் முன்னெடுப்பதற்கு அரசாங்கம் அனுமதிக்காது என சிறிலங்காவின் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நாடாளுமன்றத்தில் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் கடந்த 20.03.2026 (வெள்ளிக்கிழமை) அன்று எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

சிறிலங்காவின் உள்நாட்டுப் பொறிமுறைகள் ஊடாகவே தீர்வு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்கள் குறித்து எந்தவொரு வெளித்தரப்போ அல்லது சர்வதேச அமைப்போ தலையிட்டு விசாரணை நடத்துவதை அரசாங்கம் கடுமையாக எதிர்க்கிறது என்று அமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டார். இத்தகைய சம்பவங்கள் தொடர்பில் சிறிலங்கா அரசின் உள்நாட்டுப் பொறிமுறைகள் ஊடாகவே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு தீர்வு காணப்பட வேண்டும் என்பதையும் அவர் அவையில் திட்;டவட்டமாகத் தெரிவித்தார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை மற்றும் தரவுகள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பில் சபையில் தகவல் வெளியிட்ட அமைச்சர், 2009ஆம் ஆண்டு போரின் இறுதிக்கட்ட காலப்பகுதியில் சுமார் 2,764 பேர் காணமல் ஆக்கப்பட்டுள்ளாதாக கிடைக்கப்பெற்ற தரவுகள் தெரிவிக்கின்றன என்றார். எனினும், இந்த எண்ணிக்கை விவாதத்துக்குரியது எனவும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான துல்லியமான தரவுகள் தற்போது அரசாங்கத்தின் வசம் இல்லை எனவும் அவர் ஒப்புக்கொண்டார். மேலும், ஈழப் போர்க் காலப்பகுதியில் இரு தரப்பினருமே இத்தகைய காணாமலாக்கல் சம்பவங்களில் ஈடுபட்டதாகவும், அரசாங்கம் இத்தகைய செயல்களை ஒருபோதும் ஆதரிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

நீண்டகாலப் போராட்டமும் தற்போதைய சூழலும்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உண்மையைக் கண்டறியவும், நீதியைக் கோரியும் நீண்டகாலமாகப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில், பன்னாட்டு விசாரணையை நிராகரித்து உள்நாட்டுப் பொறிமுறையை மட்டுமே முன்னிறுத்தி சிறிலங்காவின் நீதி அமைச்சர் விடுத்துள்ள இந்த அறிவிப்பானது, அரசியல் தளத்தில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.

செய்திமடல் பதிவு

முரண்செய் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்.