வட்டுக்கோட்டை பிரதேச மருத்துவமனையாகத் தரமுயர்த்தக் கோரி மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்
மார்ச் 21, 2026
யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பிரதேச மருத்துவமனைக்கு முன்பாக அடிப்படை மருத்துவ வசதிகளை மேம்படுத்தக் கோரியும், மருத்துவமனை நிர்வாகத்தின் அசமந்தப் போக்கைக் கண்டித்தும் இன்று (21.03.2026) மக்கள் அமைதி வழியிலான கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். மருத்துவமனையின் நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்போராட்டத்தில் பொதுமக்கள், வைத்தியசாலையின் பயனாளிகள் மற்றும் சமூக மட்ட அமைப்பினர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
ஆளணி மற்றும் வளப்பற்றாக்குறை
இந்த மருத்துவமனையில் போதுமான கட்டட வசதிகள் காணப்படுகின்ற போதிலும், தற்போது இரு மருத்துவர்கள் மட்டுமே கடமையாற்றுவதாகவும், ஒரு தாதியர் கூட இதுவரை நியமிக்கப்படவில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் சுட்டிக்காட்டினர். மேலும், வட்டுக்கோட்டை மருத்துவமனைக்குச் சொந்தமான நோயாளர் காவு வண்டி (Ambulance) தற்காலிகமாகக் காரைநகர் வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், அதனை மீண்டும் தமது மருத்துவமனைக்கே வழங்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
இடைநிறுத்தப்பட்ட சேவைகள் மற்றும் கட்டுமானங்கள்
கடந்த காலங்களில் குறித்த மருத்துவமனையில் 24 மணிநேர மருத்துவச் சேவையும், நோயாளர் விடுதியும் (Ward) இயங்கி வந்த நிலையில், தற்போது அந்தச் சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன. இது நோயாளர்களுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், மருத்துவமனையில் ஆரம்பிக்கப்பட்டுப் பாதியில் இடைநிறுத்தப்பட்டுள்ள கட்டட நிர்மாணப் பணிகளைப் பூர்த்தி செய்வதற்குரிய நிதியை அரசாங்கம் உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், “மருத்துவமனையைத் தரமுயர்த்துங்கள்”, “விடுதி இயங்கும் மருத்துவமைனயாகத் தொழிற்பட வேண்டும்”, “மக்களின் ஆரோக்கியம் எங்கள் உரிமை”, “சுகாதார சேவைகள் அரசின் கடமை”, “வட்டுக்கோட்டை மருத்துவமனையைப் புறக்கணிக்கக் கூடாது” மற்றும் “மருத்துவ சேவையில் குறைபாடு வேண்டாம்” உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்பை வெளியிட்டனர். மேற்குறிப்பிட்ட அடிப்படைப் பிரச்சினைகளுக்குச் சுகாதாரத் தரப்பினரும் அதிகாரிகளும் உடனடியாகத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என இப்போராட்டத்தின் ஊடாக வலியுறுத்தப்பட்டுள்ளது.





