மேற்கத்திய ஊடகங்களும் போரின் மொழியும்
ஈரான்–இஸ்ரேல்–அமெரிக்கா மோதலில் மேற்கத்திய ஊடகங்களின் செய்தி வழங்கல் பெரும்பாலும் ஒரு போர் ஆயுதமாகவே செயல்படுகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களை "தற்காப்பு" என்றும், ஈரானின் நடவடிக்கைகளை "தூண்டுதல்" என்றும் சித்தரிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட மொழிப் பயன்பாட்டை இவ்வூடகங்கள் கையாள்கின்றன. இந்த மொழியியல் சட்டகம் சில மக்களை மனிதாபிமானமற்றவர்களாக சித்தரிப்பதன் மூலம் பொது மக்களின் ஒப்புதலை உருவாக்கி, படைத்துறை ஆக்கிரமிப்பில் ஏற்படும் பொதுமக்கள் பலியை சாதாரணமாக்குகிறது.
2026 பிப்ரவரி 28 அன்று, அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானுக்கு எதிராக வான் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தின. இத்தாக்குதல்கள் இராணுவ நிலைகள், அணு ஆயுத வசதிகள் மற்றும் தெஹ்ரான் உட்பட பிற நகரங்களில் உள்ள மூலோபாய தளங்களை குறிவைத்தன. ஆரம்பகட்ட தாக்குதல்களில் ஒன்றில் 1989 முதல் நாட்டை வழிநடத்திய ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.
அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஈரான் இஸ்ரேல் மற்றும் வளைகுடாவில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகளை நோக்கி தொடர் வெடிகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது. இத்தாக்குதல்கள் அமெரிக்க இராணுவத் தளங்கள், கடற்படை நிலைகள், வான் பாதுகாப்பு அமைப்புகள், ஆற்றல் உள்கட்டமைப்பு, துறைமுகங்கள் மற்றும் பிராந்திய மூலோபாய வசதிகளை இலக்காக கொண்டன.
உலகம் மூன்றாம் உலகப் போரின் விளிம்பில் நிற்கிறது என்று பலர் வர்ணிக்கும் இந்த நேரத்தில், ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவை உள்ளடக்கிய மத்திய கிழக்கின் தீவிரமடையும் பதட்டங்கள் ஒன்றை தெளிவாக்குகின்றன - போர்கள் போர்க்களங்களில் மட்டுமே நடப்பதில்லை. அவை மொழியின் வார்ப்பு, சொல் தேர்வு மற்றும் சொற்களஞ்சியம் ஆகியவற்றின் வழியாகவும் நடத்தப்படுகின்றன. இன்றைய ஊடக சுற்றுச்சூழலில், மக்கள் எந்தச் செய்தியை படிக்கிறார்கள் என்பது தகவல் மட்டுமன்றி, அத்தகவலை வழங்குவதற்குப் பயன்படுத்தப்படும் சொற்களாலும் பெருமளவில் தீர்மானிக்கப்படுகிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், மொழியே ஒரு போர் ஆயுதமாகிவிட்டது - இராணுவ மூலோபாயத்திற்கு இணையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஆயுதம்.
மேற்கத்திய ஊடகங்களின் சொல் வழக்கு
CNN, நியுயோர்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் போன்ற மேற்கத்திய ஊடகங்கள் பெரும்பாலும் இராணுவ நடவடிக்கைகளை யார் செய்கிறார்கள் என்பதைப் பொறுத்து வெவ்வேறு சொற்களை பயன்படுத்துகின்றன. அமெரிக்கா அல்லது இஸ்ரேல் தாக்குதல் நடத்தும்போது அவை "தற்காப்பு", "பதிலடி", "தடுத்தாட்சி" அல்லது "சுதந்திரம்" மற்றும் "ஸ்திரத்தன்மை" காக்கும் முயற்சியாக வருணிக்கப்படுகின்றன. ஈரான் அல்லது வெனிசுலா போன்ற நாடுகள் இராணுவ பதிலடி கொடுக்கும்போதோ, அவை "தீவிரமாக்கல்", "தூண்டுதல்" அல்லது "பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்" என்று அழைக்கப்படுகின்றன.
2026 பிப்ரவரி 28 அன்று, வாஷிங்டன் போஸ்ட் "திடீர் பகல்நேர தாக்குதலில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானிய தலைமையை அழிக்கின்றன" என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டது. "தைரியமான பகல்நேர தாக்குதல்", "அகற்றப்பட்டனர்", "வெளிநாட்டுத் தலைவர்களை வீழ்த்துதல்" போன்ற சொற்கள் இந்த இராணுவ தாக்குதலை மூலோபாய திறன், தைரியம் மற்றும் வெற்றியின் வெளிப்பாடாக சித்தரிக்கின்றன.

2026 மார்ச் 2 அன்று, CNN "ஹிஸ்புல்லா இஸ்ரேல் முடிக்க காத்திருந்த சண்டையை மீண்டும் தொடங்கியது" என்ற தலைப்பில் ஒரு பகுப்பாய்வை வெளியிட்டது. இத்தலைப்பு ஹிஸ்புல்லாவை மோதலை மீண்டும் தொடங்கியவராகவும், இஸ்ரேலை ஆக்கிரமிப்புக்கு பதிலடி கொடுப்பவராகவும் காட்டுகிறது.
மாணவிகள் படுகொலை
2026 பிப்ரவரி 28 அதிகாலையில், அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது வான் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தின. தெற்கு ஈரானில் உள்ள ஹோர்மோஸ்கான் மாகாணத்தின் மினாப் நகரில் உள்ள ஷஜரா தய்யிபா பெண்கள் ஆரம்பபாடசாலைக்கு அருகில் ஒரு ஏவுகணை பாய்ந்தது. வகுப்பறைகளில் மாணவிகள் இருந்த நேரத்தில் இந்த வெடிப்பு நிகழ்ந்தது. சுமார் 160–170 பேர் கொல்லப்பட்டனர் — அவர்களில் பெரும்பாலோர் 7 முதல் 12 வயது வரையிலான பள்ளிமாணவிகள்.
பல மேற்கத்திய செய்தி அறிக்கைகளை ஆய்வு செய்தபோது, "அருகில்", "இராணுவத் தளத்திற்கு அடுத்தாக", "இராணுவ இலக்காக இருக்கலாம்", "ஈரானிய பள்ளிக்கு அடுத்துள்ள தளத்தை அமெரிக்க டோமாஹாக் ஏவுகணை தாக்கியதாக தோன்றுகிறது" போன்ற தகுதிப்படுத்துபவர்களை (qualifiers) செய்திகள் தொடர்ந்து பயன்படுத்தியதை காண முடிந்தது. இவ்வார்த்தைகள் இராணுவ வசதியின் அருகாமையை முன்னிலைப்படுத்தி, இலக்கு பள்ளி அல்ல என்ற தோற்றத்தை உருவாக்கின.
அமெரிக்க டோமாஹாக் ஏவுகணை குறிவைக்கப்பட்ட பள்ளியை நோக்கி பறந்து செல்வதை காண்பிக்கும் ஒரு வீடியோ பின்னர் வெளியானது. இருப்பினும், பெரும்பாலான செய்திகளில் பயன்படுத்தப்பட்ட மொழி இந்த சம்பவத்தை இராணுவ நடவடிக்கையில் நடந்த சாத்தியமான விபத்தாக சித்தரித்தது. நேரடி தாக்குதலை மறைத்து அருகாமையை வலியுறுத்தும் மொழியால், தாக்குதலை நடத்தியவர்களிடமிருந்து பொறுப்பை நகர்த்தி, பள்ளிக்குழந்தைகளின் மரணங்களை தற்செயலான விளைவாக சித்தரித்தது.
யாருடைய உயிருக்காக துக்கம் அனுசரிக்கப்படுகிறது, யாருடைய உயிருக்காக அனுசரிக்கப்படுவதில்லை?
தத்துவஞானி ஜுடித் பட்லர் போரின் நெறிமுறை நிலப்பரப்பை மொழி எவ்வாறு வடிவமைக்கிறது என்பதை புரிந்துகொள்வதற்கு சக்திவாய்ந்த கட்டமைப்பை வழங்குகிறார். "போரின் சட்டகங்கள்: எப்போது ஒரு உயிர்
அதன் இறப்பிற்காக துயரம் அனுஷ்டிக்கப்படக்கூடியது – ?" என்ற தன் நூலில் பட்லர் வாதிடுகிறார் — வன்முறை என்பது ஒருபோதும் பொதுமக்களுக்கு நடுநிலையான வடிவில் வழங்கப்படுவதில்லை. மாறாக, அது அரசியல் சொல்லாடல், ஊடக நிறுவனங்கள் மற்றும் ஆதிக்க அறிவு முறைமைகளால் உருவாக்கப்பட்ட விளக்கப் "சட்டகங்கள்" மூலம் வழங்கப்படுகிறது. இந்த சட்டகங்கள் போர்க்காலத்தில் பாதிப்பு, பொறுப்பு மற்றும் சட்டபூர்வமான தன்மையை பார்வையாளர்கள் எவ்வாறு புரிந்துகொள்கிறார்கள் என்பதை வடிவமைக்கின்றன.
பட்லரின் வாதப்படி, பொது சொல்லாடல் சில உயிர்களை முழுமையான மனிதர்களாக அங்கீகரிக்கிறது, மற்றவற்றை தொலைதூர, சுருக்கமான அல்லது தியாகிக்கத்தக்கவர்களாக நடத்துகிறது. சில மரணங்கள் அரும்பாடாகவும் நெறிமுறை ரீதியில் அதிர்ச்சியூட்டுவதாகவும் தோன்றுகின்றன, மற்றவை புவிசார் அரசியல் மோதலின் எதிர்பார்க்கப்பட்ட விளைவாக நடத்தப்படுகின்றன. இந்நிகழ்முறைகளால், சில உயிர்கள் பொதுவில் "துக்கிக்கத்தக்கவை" ஆகின்றன, மற்றவை கூட்டுத் துக்கத்தின் எல்லைக்கு வெளியே தள்ளப்படுகின்றன.
மொழியின் அரசியல்
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் மோதல் குறித்த செய்தி வழங்கலில், வன்முறை மற்றும் பொறுப்பு எவ்வாறு உணரப்படுகிறது என்பதை மொழி தீர்க்கமான விதத்தில் வடிவமைக்கிறது. சில மக்கள் தொடர்ந்து "தீவிரவாதம்", "ஸ்திரமின்மை" அல்லது "அச்சுறுத்தல்" என்ற கதைகள் மூலம் சித்தரிக்கப்படும்போது, அவர்களின் பாதிப்பை பார்வையாளர்கள் அங்கீகரிப்பது கடினமாகிறது. அவர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறையை மனித சோகமாக அல்லாமல் பாதுகாப்பு கொள்கையின் விஷயமாக சித்தரிக்க முடிகிறது.
மேற்கத்திய ஊடகங்களில் தலைப்புச் செய்திகள் பெரும்பாலும் இஸ்ரேலின் ஈரானிய செல்வாக்கை எதிர்கொள்ளும் அல்லது பாதுகாப்பு அச்சுறுத்தல்களை தடுக்கும் முயற்சிகளை முன்னிலைப்படுத்துகின்றன. ஈரான் பதிலடி கொடுக்கும்போது, செய்திகள் பிராந்திய ஸ்திரமின்மை பற்றிய எச்சரிக்கைகளை நோக்கி திரும்புகின்றன. இரு சந்தர்ப்பங்களிலும் ஒரே செயல் மற்றும் எதிர்வினை சுழற்சி நடக்கிறது — ஆனால் ஒவ்வொரு படியின் சட்டகமே பார்வையாளர்கள் பொறுப்பு மற்றும் சட்டபூர்வமான தன்மையை எவ்வாறு புரிந்துகொள்கிறார்கள் என்பதை வடிவமைக்கிறது.

ஈரானின் அரசியல் வாரிசு குறித்த செய்திகளில், பல மேற்கத்திய ஊடகங்கள் வலுவான சித்தாந்த தாக்கங்கள் கொண்ட சொற்களை விரைவாக பயன்படுத்தின. "கமேனியின் கடும்போக்கு மகன்", "கடும்போக்கு தலைவர்", "ஆட்சியை நீட்டிக்கும் கடும்போக்கு", "மர்ம நபர்" போன்ற சொற்கள் நடுநிலையான விளக்கங்கள் அல்ல. "கடும்போக்கு", "எதிர்ப்பு" அல்லது "மர்மம்" போன்ற சொற்கள் வாசகர்கள் கட்டுரையின் உள்ளடக்கத்தை படிப்பதற்கு முன்பே அரசியல் முன்னேற்றங்களை எதிர்கொள்ளல் மற்றும் கணிக்கமுடியாத தன்மையின் சொற்களஞ்சியத்தில் நிலைநிறுத்துகின்றன.
இந்த இயக்கவியல் மத்திய கிழக்கு மேற்கத்திய அறிவு முறைமைகளில் எவ்வாறு சித்தரிக்கப்பட்டது என்ற நீண்ட அறிவுசார் வரலாற்றையும் எதிரொலிக்கிறது. எட்வர்ட் சையீட்டின் ஓரியண்டலிசம் கோட்பாடு இந்த பிராந்தியம் வரலாற்றில் எவ்வாறு "பகுத்தறிவற்றது", "ஏற்றவுடன் வெடிக்கக்கூடியது" மற்றும் "ஒரு மேற்கத்திய பகுத்தறிவிலிருந்து அடிப்படையில் வேறுபட்டது" என்று சித்தரிக்கப்பட்டது என்பதை விவரிக்கிறது. இன்றும் கூட, மத்திய கிழக்கு நடிகர்களை உள்ளடக்கிய மோதல்கள் பெரும்பாலும் மேற்கத்திய பாதுகாப்பு மற்றும் பகுத்தறிவின் விளக்கங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் கட்டமைப்புகளின் மூலம் விளக்கப்படுகின்றன.
அல் ஜசீரா ஊடகத்தில் ஊடகவியல் விமர்சனப் பகுதியில் வெளிவந்த ஆங்கில மூலக் கட்டுரையானது மூத்த ஊடகவியலாளர் திரு. ரஜீவன் அவர்களினால் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டது.