திங்கள், 23 மார்ச், 2026
|
தினசரி செய்திகள்

ஈரான் மீதான அமெரிக்க - இசுரேல் போர் தொடர்பில் சிறிலங்காவிற்கான ஈரான் தூதரின் தகவல்

ஈரான் மீதான அமெரிக்க - இசுரேல் போர் தொடர்பில் சிறிலங்காவிற்கான ஈரான் தூதரின் தகவல்
பணிமனைச் செய்தியாளர்
பணிமனைச் செய்தியாளர்

மார்ச் 23, 2026 · 2 நிமிட வாசிப்பு

வளைகுடா போர்ப் பதற்றத்துக்கு மத்தியில், அண்மையில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து நடத்தப்பட்ட தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்ட ஈரானின் 'IRIS Dena' போர்க்கப்பலில் இருந்தவர்களை மீட்பதற்கு, ஈரான் கோரிக்கை விடுப்பதற்கு முன்னரே சிறிலங்கா நடவடிக்கை எடுத்திருந்ததற்கு சிறிலங்காவிற்கான ஈரான் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் நன்றி தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஈரான் தூதரகத்தில் இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

ஈரான் போரை விரும்பவில்லை

2026 பெப்ரவரி 28 அன்று ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த போதே பதற்ற நிலை தீவிரமடைந்துள்ளது. அந்த காலப்பகுதியில் அமெரிக்காவும் இசுரேலும் இணைந்து ஈரான் மீது இராணுவத் தாக்குதல்களை நடத்தியதாக அவர் குற்றம் சாட்டினார்.

மினாப் பகுதியில் உள்ள பெண்கள் பாடசாலை மற்றும் இசுலாமியக் குடியரசின் உச்சத் தலைவரை அவரது இல்லத்தில் வைத்து படுகொலை செய்தமை உள்ளிட்ட குடிமக்களின் உட்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் இதில் அடங்குவதாக அவர் தெரிவித்தார்.

பாடசாலைகள், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பொது இடங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இத்தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், இது குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை நடவடிக்கை எடுக்காமை கவலையளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பன்னாட்டுச் சட்டங்களின்படி, ஐக்கிய நாடுகள் சாசனத்தின் 15.1 ஆவது பிரிவின் கீழ் ஈரான் தனது 'தற்காப்பு உரிமையைப்' பயன்படுத்தியதாகத் தூதுவர் உறுதிபடத் தெரிவித்தார்.

2026 மார்ச் மாதம் நடைபெற்ற மற்றுமொரு சம்பவம் குறித்துக் குறிப்பிட்ட அவர், 'ஆடையn 2026' கடற்படைப் பயிற்சியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த IRIS Dena' என்ற ஈரானியக் கப்பல், சிறிலங்கா கடற்பரப்புக்கு அருகில் வைத்துத் தாக்கப்பட்டதாகக் கூறினார்.

இதில் ஆயுதமற்ற 104 மாலுமிகள் உயிரிழந்ததாகவும், போர்க்களத்திலிருந்து 1,100 கடல் மைல் தொலைவிலிருந்த இந்தக் கப்பலைத் தாக்கியதை அமெரிக்க அதிபர் ஒரு 'பொழுதுபோக்கு' என வர்ணித்தமை மனிதாபிமானச் சட்டங்களை மீறும் செயல் என அவர் கண்டனம் தெரிவித்தார்.

ஈரான் போரை விரும்பவில்லை, ஆனால் ஆக்கிரமிப்பாளர்களுக்குத் தீர்க்கமான பதிலடி கொடுக்கும் எனத் தூதுவர் மீண்டும் வலியுறுத்தினார்.

அத்துடன், ஹோர்முஸ் நீரிணை ஈரானிய கடற்பரப்பிற்குள் ஒரு 'போர் வலயமாக' பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது நீரிணை மூடப்பட்டதைக் குறிக்காது, மாறாக 'எதிரி நாடுகளின் கப்பல்களுக்கான' அனுமதி கட்டுப்படுத்தப்பட்டுள்ளதைக் குறிப்பதாகவும் ஈரான் தூதுவர் தெளிவுபடுத்தினார்.

செய்திமடல் பதிவு

முரண்செய் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்.