ஈரான் மீதான தாக்குதலை நிறுத்துவதாக அறிவித்த ட்ரம்ப்
ஈரான் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை 5 நாட்களுக்கு நிறுத்துவதாக அமெரிக்க அரச தலைவர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பை அவர், தனது உத்தியோகபூர்வ ட்ரூத் சோசியல் கணக்கில் வெளியிட்டுள்ளார்.
அதில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள ட்ரம்ப், 'மத்திய கிழக்கில் நமது பகைமைகளுக்கு மொத்தமாக மற்றும் ஒரு முழுமையான தீர்வு காண்பது தொடர்பாக, கடந்த இரண்டு நாட்களாக அமெரிக்க கூட்டணி நாடுகளும், ஈரான் நாடும் மிகவும் நல்ல மற்றும் பயனுள்ள பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.' என கூறியுள்ளார்.
ஈரானின் எச்சரிக்கை
மேலும் 'இந்த வாரம் முழுவதும் தொடரவிருக்கும், ஆழமான, விரிவான மற்றும் ஆக்கப்பூர்வமான இந்த பேச்சுவார்த்தைகளின் தன்மை மற்றும் தொனியின் அடிப்படையில், நடைபெற்று வரும் சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல்களின் வெற்றியைப் பொறுத்து, ஈரானிய மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளுக்கு எதிரான அனைத்து ராணுவத் தாக்குதல்களையும் 5 நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு போர்த் திணைக்களத்திற்கு நான் அறிவுறுத்தியுள்ளேன்.' என்றும் ட்ரம்ப தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க ஈரான் அனுமதிக்காவிட்டால், திங்கட்கிழமை மாலைக்குள் அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ட்ரம்ப் அச்சுறுத்தியிருந்தார்.
அதனை தொடர்ந்து, தங்கள் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அமெரிக்க ஆதரவு மின் உற்பத்தி நிலையங்களையும், அமெரிக்கத் தளங்களுக்கு மின்சாரம் வழங்கும் பிராந்திய நாடுகளின் மின் உற்பத்தி நிலையங்களையும் தாக்கி அழிப்பதாக ஈரான் எச்சரிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.
இவ்வாறானதொரு பின்னணியல், ஈரான் மின் உற்பத்தி நிலையங்கள் மீதான தாக்குதலை 5 நாட்களுக்கு நிறுத்துவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
