யாழ்ப்பாணம் செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் நடந்து வரும் அகழ்வாராய்ச்சிகள் குறித்து இங்கிலாந்து அரசாங்கம் “ஆழ்ந்த கவலை” தெரிவித்துள்ளது. இலங்கை அரசின் பலவந்தமாக காணாமலாக்கப்பட்டோர் விடயத்துடன் தொடர்புடைய மிக முக்கியமான அட்டூழிய தளங்களில் ஒன்றாக இது கருதப்படுவதால், இது குறித்து பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
பன்னாட்டு அபிவிருத்தி குழுவின் தலைவரான, நாடாளுமன்ற உறுப்பினர் சாரா சாம்பியனினால் நாடாளுமன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ள பபிரித்தானிய வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் துணை செயலாளர் கெத்தரின் வெஸ்ட், பொறுப்புக்கூறலுக்கு இங்கிலாந்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியதுடன், “நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து விவாதிக்கவும், குறிப்பாக பலவந்தமாக காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான வழக்குகளில் உறுதியான முன்னேற்றத்தை வலியுறுத்தவும் சிறிலங்கா அரசாங்கத்தை நாங்கள் தொடர்ந்து சந்தித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.
செம்மணி தளத்தில் “சுயாதீன ஐ.நா. விசாரணைக்கு” ஆதரவாக, அகழ்வாராய்ச்சிகள், தடயவியல் பகுப்பாய்வு மற்றும் பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்ட கலந்தாய்வுகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்திப் பணிமனை (குஊனுழு) என்ன பிரதிநிதித்துவங்களைச் செய்தது என்று சாம்பியன் கேட்டிருந்தார்.
“செம்மணியில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி குறித்து இங்கிலாந்து அரசாங்கம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது,” என்று வெஸ்ட் பதிலளித்தார். “மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறலை ஆதரிப்பதில் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.”

இந்த ஆண்டு ஆரம்பத்தில் தான் மேற்கொண்ட இலங்கைக்கான பயனத்தைக் குறிப்பிட்டு, வெஸ்ட் மேலும் கூறுகையில், “சனவரியில், நான் இலங்கைக்கு விஜயம் செய்து, பிரதமர், வெளிவிவகார அமைச்சர், சிவில் சமூக அமைப்புகள், அத்துடன் வடக்கு – கிழக்கு இலங்கையின் அரசியல் தலைவர்கள் உட்பட பல தரப்பினரை சந்தித்து மனித உரிமைகள் குறித்து கலந்துரையாடினேன்” என்றார்.
கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் “நாடு முழுவதிலும் உள்ள காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வருகின்றனர், அவர்களின் குரல்கள் கேட்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில் செயல்படுகின்றனர்” என்று அவர் குறிப்பிட்டார், மேலும் இந்த பிரச்சினை சிறிலங்கா அரசாங்கத்திடம் நேரடியாக எழுப்பப்பட்டுள்ளது என்பதையும் உறுதிப்படுத்தினார்.
இங்கிலாந்தின் பன்னாட்டுப் பங்கை அமைச்சர் தொடர்ந்து உறுதிப்படுத்தினார், “ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முக்கிய குழுவுடன் இணைந்து குற்றவாளிகள் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் வகையில் பன்னாட்டு முயற்சிகளை நாங்கள் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறோம்” என்று கூறினார்.
செம்மணி மனிதப் புதைகுழி நீண்ட காலமாக 1990களில் இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத படுகொலைகளுடன் தொடர்புடையது. 1998 ஆம் ஆண்டு தமிழ் பள்ளி மாணவி கிருசாந்தி குமாரசாமியின் கூட்டு பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை தொடர்பான வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த சோமரத்ன ராஜபக்சவால் முதலில் இது வெளிப்படுத்தப்பட்ட பின்னர், இந்த தளம் சர்வதேச கவனத்தை ஈர்த்தது. 1999 இல் மேற்கொள்ளப்பட்ட பகுதி அகழ்வாராய்ச்சியில் 15 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன, ஆனால் எந்த ஒரு உயர்மட்ட அதிகாரியும் இதுவரை வழக்கு தொடரப்படவில்லை.
இந்த தளம் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் மீண்டும் வெளிப்பட்டுள்ளது, மேலும் பெருந்தொகையான எலும்புக்கூடுகள், அவற்றில் பல குழந்தைகள் என நம்பப்படுகிறது, கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மனித உரிமை குழுக்கள் மற்றும் காணாமலாக்கப்பட்ட தமிழ் குடும்பங்கள் தொடர்ச்சியாக பன்னாட்டு மேற்பார்வைக்கு அழைப்பு விடுத்துள்ளன, சான்றுகள் சிதைக்கப்படுவதையும், இலங்கை அரசின் நீண்டகால தண்டனையின்மை வரலாற்றையும் எச்சரித்துள்ளன.
இந்த வார தொடக்கத்தில், தமிழர்களுக்கான அனைத்து கட்சி நாடாளுமன்ற குழுவின் தலைவரான டேம் சிவோபன் மெக்டொனா, ஏற்கனவே உள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தீர்மானம் 46ஃ1 இன் கீழ் பன்னாட்டு விசாரணையை மேற்கொள்ள இங்கிலாந்தை வலியுறுத்தினார், தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதில் கடந்தகால தோல்விகளை மீண்டும் நிகழ்த்துவதைத் தவிர்ப்பதற்கு செயல்படத் தவறினால் ஆபத்து ஏற்படும் என்றும் எச்சரித்தார்.
