எரிபொருள் விநியோகத்தர்களுக்கு வழங்கப்படும் 3 சதவீத கழிவை இரத்து செய்யும் தீர்மானத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நாட்டில் நாளொன்றுக்குத் தேவைப்படும் அளவை விடவும் இரண்டு மடங்கு எரிபொருள் நேற்றைய தினம் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்கப்பட்டதாக இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது
இந்த நிலையில்,இன்று பல எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் வழமை போன்று இயங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனத்திற்கும் எரிபொருள் விநியோகத்தர்களுக்கும் இடையிலான தற்போதைய விநியோக ஒப்பந்தத்தின்படி, எரிபொருள் நிரப்பு நிலையத்தில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு வீற்றர் எரிபொருளுக்கும் வழங்கப்படும் மூன்று சதவீத தள்ளுபடியை இரத்து செய்யத் தீர்மானிக்கப்பட்டது.
இதனையடுத்து,3 சதவீத கழிவு கொடுப்பனவு பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் வரையில் புதிய எரிபொருள் முன்பதிவுகளை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என இலங்கை கனியவள விநியோகத்தர்கள் சங்கம் தீர்மானித்திருந்தது.
இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகே நீண்ட வரிசை காணப்பட்டதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
இருப்பினும்,குறித்த நிலைமை இன்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
