கடந்த 24, 25 ஆம் திகதி நடைபெற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டம் நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற்றது.
- விதிகளிற்குப் புறம்பாக நடைபெறும், நடைபெற்ற மாணவர்கள் மீதான விசாரணைகளை உடன் நிறுத்துதல்.
- போராடுதல், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் உள்ளிட்ட மாணவர்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்தல்!
- விரிவுரையாளர்கள் மீதான முறைகேடுகளையும் பாரபட்சமின்றி விசாரணை செய்தல்.
- மாணவர்களின் கற்றலிற்கான சுதந்திரத்தை உறுதி செய்து மாணவர்களிற்கு உடனடி நிவாரணம் வழங்குதல்.
விதிகளிற்குப் புறம்பாக நடைபெறும், நடைபெற்ற மாணவர்கள் மீதான விசாரணைகளை உடன் நிறுத்துதல்.
குறித்த போராட்டத்தில் 30.05.2024, 04.09.2024, 25.10.2024 திகதியிலிருந்து மூன்று வெவ்வேறு குற்றச்சாட்டுக்களில் மாணவர்கள் மீது வகுப்புத்தடை விதிக்கப்பட்டு, உரிய காலத்தில் விசாரணைகள் ஏதும் நடைபெறாமல் இருந்தன. அவை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றுநிரூபத்திற்கு அமைவாக அது வரையறுக்கப்பட்ட காலத்திற்குள் நிறைவு செய்யப்பட்டிருக்கவில்லை.
குற்றஞ்சுமத்தப்பட்ட மாணவர்களிற்கு நடைபெற்ற விசாரணைகளின் விளைவாக மாணவர்கள் குற்றமற்றவர்கள் என விசாரணை அறிக்கையில் தெரிய வந்துள்ளது. அதற்குப் புறம்பாக மாணவர்களை தண்டிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. பல்கலைக்கழக பேரவையில் சட்ட ஆலோசனைக்குழு அது தொடர்பில் கவனம் செலுத்தி அதனை மீறிச் செயற்பட முடியாது என்று தீர்மானித்து மாணவர்களை சட்டபூர்வமாக விடுவித்துள்ளது.
இவ்வாறு விதிமீறல்களுடன் நடைபெற்ற குற்றச்சாட்டுக்களின் விசாரணைகள் பின்வருமாறு,
- கலைப்பீடத்தின் முதலாம் ஆண்டில் 100 இற்கு மேற்பட்ட மாணவர்கள் தங்களின் விருப்பத்திற்குரிய பாடங்கள் கிடைக்கவில்லை என்பதற்காக தங்களது றூயவளயிp குழுவில் “கடந்த ஆண்டுகளைப் போன்று நாங்கள் ஒரு கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்” என கலந்துரையாடியமைக்காக இரண்டு மாணவர்களிற்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்குழு மாணவர்கள் பாடத்தெரிவுகளிற்காகத் தான் மாணவர்கள் போராடுவதற்கு முயன்றிருக்கிறார்கள் அவர்களிடம் தவறான நோக்கம் கிடையாது என்று அறிக்கையிட்டு, மாணவர்கள் மீதான தடைகளை உடனடியாக நீக்குமாறும் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்விடயத்தில் முதலாம் ஆண்டு மாணவன் பல்கலைக்கழகம் நுழைவதற்கு முன்பாகவே வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- விஞ்ஞானபீட கற்றல் மண்டபத்தின் நுழைவாயிலை மாணவர்கள் உள்ளிருக்க பூட்டப்பட்ட கதவின் கதவை விஞ்ஞானபீட மாணவர் ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் உடைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த ஆண்டு 30.05.2024 ஆம் திகதி வகுப்புத்தடை விதிக்கப்பட்டிருந்தது.
குறித்த பூட்டானது பல்கலைக்கழக பாதுகாப்புத் திணைக்களத்தின் பதிவுகள் எவற்றிலும் கிடையாது என்பதோடு, நிர்வாகம் சார் உத்தரவுகளிற்கேற்ப அது பூட்டப்படவோ, முன்னறிவித்தல் மாணவர்களிற்கு விடுக்கப்படவோ இல்லை. (முன்னறிவித்தல் ஏதும் விடுக்கப்படாமை தனது தவறு என்று விஞ்ஞான பீட பீடாதிபதி தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.)
- பரமேஸ்வரன் கோவிலிற்கு முன் மாணவர்கள் கைகலப்பில் ஈடுபட்டதாகக் குறி கடந்த 04.09.2024 அன்று ஐந்து (05) மாணவர்களிற்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டிருந்தது. இங்கு மாணவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு இடங்களிலேயே இனங்காணப்பட்டிருந்தனர் என்பதோடு, சம்பவ இடத்தில் அவர்கள் இனங்காணப்படவில்லை.
அவ்வாறிருக்க விசாரணைக்குழு மாணவர்கள் தவறுகளேதும் இழைக்கவில்லை என்று அறிக்கை சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அதனை மீறியே அந்த மாணவர்கள் தண்டிப்பதற்குக் கோரப்பட்டுள்ளனர்.
போராடுதல், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் உள்ளிட்ட மாணவர்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்தல்!
முதலாம் ஆண்டு மாணவர்கள் தாங்கள் தமது Whatsapp குழுவில் உரையாடியதனை அடிப்படையாகக் கொண்டு அவர்களிற்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது, இச்செயலானது மாணவர்களின் கருத்து வெளியிடும் உரிமை மற்றும் போராடும் உரிமை என்பவற்றை மீறும் செயலாகும்.
அரசியலமைப்பின் உறுப்புரை 14 ஆனது அமைதியான முறையில் ஒன்று கூடுதல், வெளியிடுதல் உட்படப் பேச்சுச் சுதந்திரம், கருத்து தெரிவிப்பதற்கான உரிமை என்பவற்றை உறுதி செய்துள்ளது. இவற்றினை பல்கலைக்கழக வளாகத்தினுள் மாணவர்களிற்கு உறுதி செய்ய வலியுறுத்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது,
விரிவுரையாளர்கள் மீதான முறைகேடுகளையும் பாரபட்சமின்றி விசாரணை செய்தல்.
- விஞ்ஞான பீட கற்றல் மண்டபத்தில் மாணவர்கள் உள்ளிருக்க (30.05.2024) கற்றல் மண்பத்திற்கும் கணிதத் துறைக்கும் பொதுவான நுழைவாயிலானது பூட்டப்பட்டது. இதன் போது பல்கலைக்கழக பாதுகாப்புத் திணைக்களத்தில் பதிவில் இல்லாததும் நிர்வாக மட்டத்தில் எவ்வித அறிவித்தல்களுமின்றி ஒரு சில விரிவுரையாளர்களினால் பூட்டப்பட்டிருந்தது. மாணவர்களை வெளியேற்றுவதற்காக அவ்விடத்திற்குச் சென்று திறக்க முயன்ற விஞ்ஞானபீட மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் துணைத்தலைவரிற்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டது.
ஆனால் குறித்த கதவினை எவ்வித நிர்வாக உத்தரவுகளுமின்றி பூட்டிய விரிவுரையாளரின் மீது இதுவரை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
- கடந்த 27.08.2024 அன்று பல்கலைக்கழக பரமேஸ்வரன் கோவிலிற்கு முன்னால் அமைந்துள்ள கல்லாசனங்கள் கலைப்பீட பீடாதிபதியினால் உடைத்தெறியப்பட்டது. குறித்த கல்லாசனங்களில் மாணவர்கள் சிலர் மது போதையில் மாணவர்கள் சிலருடன் முரண்பாட்டில் ஈடுபட்டதாகக் கூறி உடைத்தெறியப்பட்டது.
ஆனால் அவ்விடத்தில் கல்லாசங்கள் இருத்தல் தவறு எனில் உரிய நிர்வாக உத்தரவுகளைப் பின்பற்றி அகற்றி வேறொரு இடத்தில் அமைத்திருக்க வேண்டும். ஆனால் பொதுச் சொத்தை உடைத்தெறித்தமை தவறு. குறித்த செயலை பல்கலைக்கழக பணியாளர்களைக் கொண்டு மேற்கொண்டிருக்க முடியும் மாறாக, அதனை உடைத்தெறிய பேராசிரியரும் மாணவர்களும் அவசியமில்லை.
அவ்வாறு சமூக நோக்கத்தில் அதனை உடைத்தெறிந்தமை சரியாகக் கொள்ளப்பட்டால், மாணவர்களை வெளியேற்றுவதற்காக விஞ்ஞானபீட கற்றல் மண்டப நுழைவாயிலை திறக்கச் சென்ற ஒன்றியத் தலைவரை தவறென்று தண்டிப்பது எவ்வாறு சரியாகும் என்றே மாணவர்கள் தங்கள் நியாயத்தைக் கேட்டிருந்தனர்.
மாணவர்களின் கற்றலிற்கான சுதந்திரத்தை உறுதி செய்து மாணவர்களிற்கு உடனடி நிவாரணம் வழங்குதல்.
கலைப்பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்கள் அனைவரும் கலைiமானி கற்கை நெறிக்கென்றே உள்வாங்கப்பட்டனர். அவர்கள் இந்த பாடம் தான் கற்கலாம் என குறித்தொதுக்கி உள்வாங்கப்படவில்லை. எனவே அவர்களை நிர்வாகம் வழங்கும் பாடங்களை கற்க நிர்ப்பந்திப்பதற்கு எதிராக, தாங்கள் விரும்பிய பாடங்களை அனுமதிக்க கோரியும், பாதிக்கப்பட்ட மாணவர்களிற்கு உரிய நிவாரணம் வழங்க கோரியும் போராட்டம் நடைபெற்றிருந்தது.
அதிக மாணவர்களால் விண்ணப்பிக்கப்பட்ட கற்கைத் துறையொன்றிற்கு மீள க.பொ.த உயர்தர Z-Score மீள பார்க்கப்படுதல் என்பது சமமானவர்கள் என்று உள்ளீர்க்கப்பட்ட மாணவர்களிடையே ஏற்றத் தாழ்வுகளையே உருவாக்கும். Z-Score என்பது உயர்தரத்தின் மூன்று பாடங்களையும் அடிப்படையாகக் கொண்டே கணிக்கப்படுகின்றது. அவ்வாறு அது பார்க்கப்பட்டால் மாணவர்கள் அதிகம் தேர்ச்சியற்ற, ஆர்வமற்ற பாடங்கள் மாணவர்கள் தாங்கள் ஆர்வமுள்ள பாடங்களைக் கற்பதில் தாக்கம் செலுத்தும்.
எடுத்துக்காட்டாக, உயர்தரத்தில் அரசறிவியல், ஊடகம், பொருளியல் ஆகிய பாடங்களில் முறையே A, C, C ஆகிய சித்திகளைப் பெற்ற மாணவன் ஒருவன், பல்கலைக்கழக முதலாம் ஆண்டில் அரசறிவியல் பாடத்தையொன்றாகத் தேர்வு செய்தால் அவனுக்கு அந்தப் பாடம் Z-Score இணை அடிப்படையாகக் கொண்டு மறுக்கப்படுகின்றது. ஊடகம், பொருளியல் பாடங்களில் ஏற்பட்ட வீழ்ச்சியானது மூன்று பாடங்களையும் சேர்த்து கணிக்கப்படும் Z-Score இல் வீழ்ச்சியினை ஏற்படுத்தும். ஆனால் அரசறிவியல் பாடத்தில் “A” சித்தியினைப் பெற்ற மாணவனுக்கு அரசறிவியலைக் கற்பதில் அவன் தேர்ச்சி பெறாத இரண்டு பாடங்கள் தீர்மானக்கின்றன.
இவ்வாறான முறைமைகள் மாணவர்கள் தாங்கள் விரும்பிய பாடங்களைக் கற்பதில் செல்வாக்குச் செலுத்துகின்றன என்றும் தமக்கு நிவாரணம் வழங்கு விரும்பிய பாடங்களை கற்பதற்கு வழியமைத்துத் தருமாறும் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.