உலகளவில் இலட்சக்கணக்கான கண்பார்வையற்றவர்களுக்கு பிரெய்லி எழுத்து முறைதான் ஞானப்பார்வையாக இருந்து வருகிறது என்று சொன்னால் நம்பிதான் ஆக வேண்டும். நவீனமயமாகி கொண்டே இந்த உலகத்தில் மனிதன் எவ்வளவு வளர்ந்திருந்தாலும் சில இயற்கையின் படைப்புக்கள் மற்றும் நடைமுறைகளை நம்மால் மாற்றியமைக்க முடியாது. உதாரணமாக இரவு பகல் மாறி மாறி வருவது இதற்கு சிறந்த உதாரணம் எனலாம்.
நமது வாழ்வில் நாம் இந்த மாற்றங்களைக் காண முடிந்தாலும் சிலரது வாழ்வு எப்போதும் இருளால் மட்டும் நிறைந்த உலகமாகவே காணப்படுகின்றது. பார்வையை இழந்தோரது வாழ்வில் வெளிச்சம் என்ற ஒன்றை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. இவ்வாறு பார்வையற்றோரது வாழ்வில் விடியலாய் வந்தவரே லூயி பிரெய்லி ஆவார். அதாவது கண் பார்வை இழந்தோருக்கு தன்னம்பிக்கையூட்டும் வகையிலும், உலகம் முழுவதும் உள்ள கண்பார்வை குறைபாடு உள்ளவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்த புது எழுத்துருவைக் கண்டுப்பிடித்த லூயிஸ் பிரெய்லி (Louis Braille) பிறந்த தினமான ஜனவரி 4-ம் திகதியன்று பிரெய்லி தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
1809ல் பிறந்த லூயிஸ் பிரெய்லி, பிறவியிலேயே பார்வையற்றவர் அல்ல. குழந்தை பிராயத்தில் அவர் எதிர்கொண்ட விபரீத விளையாட்டு, அடுத்தடுத்து இரு கண்களின் பார்வையையும் பறித்தது. அதாவது பிரான்சில் 1809ஆம் ஆண்டு ஜனவரி 4ம் திகதி குடும்பத்தில் நான்காவது பிள்ளையாக லூயி பிரெய்ல் பிறந்தார். லூயியின் தந்தை ஒரு தோல் வியாபாரி. தோல்களை வெட்டி தனது கைப்பணியால் கைப்பைகள், பணப்பைகள், காலணிகள் போன்றவற்றைத் தயாரித்து விற்பனை செய்வதே தொழிலாகக் கொண்டிருந்தார். சிறு வயது முதலே லூயி சுட்டித்தனமாகவும் அனைத்தையும் பயிலுவதில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். பிரெய்லுக்கு மூன்று வயது நிரம்பியிருந்தது. ஒரு சமயம் தந்தை வீட்டில் இல்லாத சமயம் தந்தையின் ஊசியை எடுத்து தோலில் தைத்து பழகி விளையாடிக் கொண்டிருந்த வேளை கண்ணில் ஊசி குற்றி விட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற போதிலும் அந்த ஒரு கண்ணின் பார்வையை இழந்தார். சில காலங்கள் கழித்து முதல் கண்ணில் ஏற்பட்ட பாதிப்பின் விளைவினால் மற்றைய கண்ணின் பார்வையையும் இழந்தார் லூயிஸ் பிரெய்லி.
முழுமையான பார்வைத் திறனுடன் பிறந்தவர், திடீரென பார்வையை இழந்ததன் வேதனையை அவர் உணர்ந்தார். இதனால் மீண்டும் பார்வையை மீளப்பெற வேண்டும் அல்லது அதற்கு இணையான வாய்ப்புகளை பெற வேண்டும் என்பதில் இளம் வயது முதலே தீரா ஆர்வம் கொண்டிருந்தார். பார்வையற்றோருக்கான பள்ளியில் லூயிஸ் சேர்க்கப்பட்டு பார்வை போனதைப் பற்றி வருந்தாமல் துறு, துறு சிறுவனாகவே இருந்தார். பள்ளியில் கரும்பலகையும் புத்தகத்தையும் பார்க்க முடியவில்லை என்றாலும் ஆசிரியர் நடத்துவதைக் கூர்ந்து கேட்டு சிறந்த மாணவராக வலம் வந்தார். தொடக்கக் கல்வியை முடித்தபின் பார்வையற்றோர் பள்ளியில் சேர்ந்தார். மேற்படிப்பைத் தொடரும் போதுதான் பல்வேறு விஷயங்களை அறிந்து கொள்ள சிரமம் இருப்பதாகத் தோன்றியது. அந்நேரத்தில் பிரெஞ்சு ராணுவத்தில் ‘Night Writing’ என்ற இரவு நேர எழுத்து என்ற முறையை அறிமுகம் செய்தனர். 12 புள்ளிகளை அடையாளமாகக் கொண்டு ராணுவ வீரர்கள் விடயத்தைப் புரிந்து கொள்வார்கள்.
விளக்கமாகச் சொல்வதானால் ராணுவ போர் முனையில் உள்ள சிப்பாய்களுக்கு வழக்கமான முறையில் தகவல் அனுப்பினால். இரவு நேரங்களில் அதைப் படிக்க விளக்கு நெருப்பைப் பயன்படுத்த வேண்டியதிருக்கும். அது எதிரிப் படைகள் கண்டுப் பிடிக்க எளிதான இலக்காக்கி கொண்டிருந்தது. இதைத் தவிர்க்கத்தான் இந்த Night Writing’ முறையை சார்ல்ஸ பார்பியர் என்ற பிரெஞ்ச் கேப்டன் உருவாக்கியிருந்தார். 12 புள்ளிகளை அடிப்படையா வைத்து உருவாக்கப்பட்ட அந்த முறையில், காகிதத்தின் புள்ளிகள் மேலெழுந்து மேடு மாதிரி ஒரு அமைப்பை கொண்டிருக்கும். குறிப்பிட்ட வரிசையில் புள்ளிகள் இருந்தா அது ஒரு எழுத்தையோ எண்ணையோ குறிக்கும். அதே போல் எல்லா எழுத்து மற்றும் எண்ணுக்கும் புள்ளிகளை வைத்து குறியீடு உருவாக்கியிருப்பார்கள். இதை விரலால் தொட்டுப் பார்த்து, என்ன தகவல் சொல்லியிருக்கார்கள் என்பதை இரவு நேரங்களில் விளக்கு வெளிச்சம் இல்லாமல் போர் முனையில் உள்ளோரால் தெரிந்து கொள்ள முடியும். ஆனால் இந்த முறை சிரமமாக இருந்ததால் எல்லோராலும் படிக்க முடியவில்லை. எனவே பிரெஞ்சு ராணுவம் இந்த முறையைக் கைவிட்டது. இதை அடுத்து இந்த முறை பார்வையற்றோர் பள்ளியில் அறிமுகப்படுத்தப்பட்டது. அங்கும் இதேபோல சிரமங்கள் ஏற்பட்டன.
இதனால் மாற்றுத்திறனாளிகள் கடும் இன்னலுக்கு ஆளானார்கள். ஆனால் மேற்படி ராணுவ முறையில் வாசிப்பதும், எழுதுவதும் தனக்கு இயல்பாக கூடி வந்ததை அறிந்து ஆனந்தம் அடைந்தார். இதை தன் சக பார்வையற்ற சக மாணவர்களுக்கு அந்த எழுத்துக்கள் மற்றும் வாசிப்பு குறித்து பிரெய்லி எடுத்துச் சொன்னபோது அவருக்கு வயது 15.
மேலும் தீவிர ஆராய்ச்சி மற்றும் கடுமையான உழைப்பின் பயனால், உலகின் முதல் பார்வையற்றோர் எழுத்துக்களை உருவாக்கினார். எப்படி என்றால் 12 புள்ளிகள் கொண்ட Night Writing முறையை அடிப்படையாகக் கொண்டு, 6 புள்ளிகள் மட்டும் வைத்து 63 விதமான சேர்க்கையில் எழுத்துக்கள் மற்றும் எண்களை உருவாக்கினார். இந்த முயற்சிகளை அவர் 1824 மேற்கொண்டு-. 1829-ல் திருப்தி அடைந்து தன் இந்தப் புதிய முறையை உலகத்துக்கு அறிமுகப்படுத்தினார் பிரெய்லி, இடைப்பட்ட காலத்தில் அவர் படித்த பள்ளியிலேயே வரலாறு, கணக்கில் அல்ஜீப்ரா மற்றும் ஜியோமெட்ரி வகுப்புகளும் எடுக்கத் தொடங்கி விட்டார்.
பிரெய்லிக்கு படிப்பு மட்டுமில்லாமல் இசையிலும் ஏகப்பட்ட ஆர்வம் இருந்தது. சிறு வயதிலேர்யே செல்லோ மற்றும் ஆர்கன் ஆகிய இரண்டு இசைக்கருவிகளை நன்றாக வாசிக்கக் கற்றுக்கொண்டார். 1834-ல் இருந்து 1839 வரை பல கிறிஸ்தவ தேவாலயங்களில் இந்த இசைக் கருவிகளை அவர் வாசித்து உள்ளார், இசை மேல் ஆர்வம் இருந்ததால் அவர் உருவாக்கிய பிரெய்லி முறையை இசைக்கும், கணிதப் பாடங்களுக்கும் உருவாக்கினார் என்று கூட சொல்லலாம். ஆக பிரெய்லி. 20 வயதில் அவரது கண்டுபிடிப்பு பிரான்சில் பார்வையற்றோர் மத்தியில் பெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. தடித்த புள்ளிகளை விரலால் தொட்டுத் துலங்குவதன் மூலம், பல்வேறு பாடங்களையும் கற்க பிரெய்லி எழுத்துக்கள் உதவ ஆரம்பித்தன.
ஆனால் பார்வைத் திறன் சவால் உடையவர்களுக்கான ஒரு கற்றல் முறையை பிரெய்லி உருவாக்கினாலும், தொடக்கத்தில் அது சரியான வரவேற்பைப் பெறவில்லை என்பது நிஜம். அவர் படித்த Royal Institute for Blind Youth பள்ளியிலேயே அவர் உருவாக்கிய முறைக்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. இதற்கிடையில் 1852-ல் பிரெய்லி காலமானார். பிரெய்லிக்கு சிறு வயதில் இருந்தே சுவாசக் கோளாறு ஏற்பட்டு கிட்டத்தட்ட 16 வருடங்கள் அந்த நோயினால் அவதிப்பட்டு வந்தார் . 1852-ல் அது மிக தீவிர பாதிப்புக்குள்ளாக்கியதால் ராயல் இன்ஸ்ட்டிட்யூட் Royal Institute மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காலமாகினார். அவர் இறந்த பிறகுதான் பிரெய்லி முறை கொஞ்சம் கொஞ்சமாக மக்களுக்குத் தெரிய வந்தது. 19-ம் நூற்றாண்டில் பிரெய்லி முறை உலகமெங்கும் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். ஜஸ்ட் புத்தகங்களோடு மட்டும் இல்லாமல், பிரெய்லி டைப்ரைட்டர், பிரெய்லி கீபோர்டு என பார்வைத்திறன் சவால் உடையவர்கள் தினசரி வாழ்க்கையில் பயன்படுத்துவதற்கு பிரெய்லி முறை மிகவும் வசதியாவும் எளிமையாகவும் ஆகி விட்டது.
இரண்டு நூற்றாண்டுகள் கடந்து இன்றைக்கு Calender, ATM, Books சாதாரண மக்கள் பயன்படுத்தும் அதே வசதிகளை யாரோட உதவியும் இல்லாம பார்வைத் திறன் சவால் உடையவர்களும் பயன்படுத்த முடிகிறது. அதற்க்கு பிரெய்லி கண்டறிந்த அந்தக் கற்றல் முறை முக்கியக் காரணம். இடையில் காப்பிரைட் பிரச்சினைகளால் பிரான்ஸில் லூயிஸ் பிரெய்லி உருவாக்கிய பிரெய்லி எழுத்து முறைகள் உலகமெங்கும் பரவுவதில் தடைகள் எழுந்தன. தன்னார்வ அமைப்புகளின் உதவியால், அந்த தடைகள் உடைக்கப்பட்டதில் பிரான்சுக்கு அப்பாலும் பிரெய்லி புரட்சி பரவியது. இன்று தமிழ் உட்பட உலகின் பெரும்பாலான மொழிகளில் பிரெய்லி மூலம் அறிவுக் கண்கள் மலர்ந்த பார்வையற்றோர் அதிகம். சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் மட்டும் சுமார் 2500 பிரெய்லி நூல்கள் உள்ளன.
பின்னாளில் பிரெய்லியோட சாதனையை போற்றும் விதமாக 1952-ல் பிரெய்லி பிறந்த ஊரில் புதைக்கப்பட்டிருந்த அவரோட உடலை பிரான்ஸ் அரசு எடுத்து வந்து பாரிஸில் உள்ள பேன்தியான்னில் (Pantheon) முழு அரசு மரியாதையோடு மறுபடியும் அடக்கம் செய்யப்பட்டது. பிரான்சில் மிகவும் மரியாதைக்குரியவர்களை அங்கு அடக்கம் செய்வார்கள் என்பதால் பிரெய்லிக்கு அந்த மரியாதையை வழங்கி பெருமிதப்பட்டுக் கொண்டது.
இவ்வாறான உலக அளவில் இலட்சக்கணக்கான பார்வையாளர்களின் பார்வை புலத்திற்கு உயிர் கொடுத்த லூயிஸ் பிரெய்லிக்கு நன்றி செலுத்தும் முகமாகவே லூயிஸ் பிரெய்லி பிறந்த தினத்தைத்தான் நன்றியோடு உலக பிரெய்லி தினமாக பார்வையற்றோர் கொண்டாடுகிறார்கள். பிரெய்லி எழுத்துக்கும் அப்பால், பார்வையற்றோர் குறித்த விழிப்புணர்வுக்காகவும், இடையூறுகளை கடப்பதற்கு உதவியாகவும் மேற்கொள்ளப்படுகின்றன.
—
நாகராசா தனுஸ்காந்,
ஊடகக்கற்கைகள் துறை, கலைப்பீடம்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.