யாரும் எதிர்பார்த்திராத சடுதியான அசாத்-சிரிய அரிசின் வீழ்ச்சியானது பூகோள அரசியல் நிலவரங்களில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கும் அதேவேளை, இம் மாறுதல்கள் சர்வதேச மற்றும் பிராந்திய தரப்புக்களின் மூலோபாய நகர்வுகளை வெளிச்சத்தில் கொண்டுவந்திருக்கிறது. உலக பொருண்மிய நிலவரங்களின் படி, இரண்டாவது பொருண்மிய பலத்தினை கொண்டுள்ள சீனாவுக்கு, அசாத்தின் வீழ்ச்சியானது, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தனது மூலோபாய கூட்டாளியொருவரின் இழப்பையே கோடிட்டு காட்டுகிறது. சீனாவின் பட்டுப்பாதை (Belt and Road Initiative – BRI) திட்டத்தில், சிரியா ஒரு முக்கிய பங்கினை வகித்திருக்கிறது. இத்திட்டத்தினூடான சீனாவின் வர்த்தக வழிகளை இலகுபடுத்தல் மற்றும், உட்கட்டமைப்பு அபிவிருத்திகளை (Infrastructure Development) வழங்குதல் என்பதாக சிரியாவின் பங்கு இருந்தது. சிரியாவிடனான சீனாவின் வரலாற்று ரீதியான தொடர்புகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இருந்தாலும், சீனாவின் சிரியாவுடனான உறவின் கவனம் பாதுகாப்பு மற்றும் படையநிலைப்பாடுகளில் அல்லாமல், பொருண்மியம் மற்றும் அபிவிருத்தி தொடர்பாகவே இருந்து வருகிறது.
2023 இல் முறைப்படுத்தப்படிருந்த சீன மற்றும் அசாத்-சிரிய அரசுகளிடையான மூலோபாய கூட்டு, இப்போது அசாத்தின் வீழ்ச்சிக்குப்பின்னர் கேள்விக்குறியான நிலையிலேயே இருக்கிறது. அசாத்-சிரிய அரசே அரபு தேசங்களில் சீனாவினை இராசதந்திர ரீதியாக அங்கீகரித்த முதல் நாடாக இருந்துவரும் நிலையில், சீனாவும் தனது நகர்வின் பங்காக, சிரியாவின் உட்கட்டமைப்பிலும் வர்த்தகத்திலும் முதலீடு செய்திருக்கிறது. அசாத்தின் வீழ்ச்சிக்கு பின், சீனா தனது மத்திய கிழக்கு மூலோபயத்தை மறுசீரமைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. சீனாவின் மசகு எண்ணை இறக்குமதிக்கான (Crude Oil Import) பங்களிப்பில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் சவுதி அரேபியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளின் பங்களிப்புடன் ஒப்பிடும் போது, சிரியாவின் பங்களிப்பு குறைவாக இருப்பதனால், சீனாவின் சிரியாவுடனான பொருண்மிய தொடர்புகள் குறிப்பிட்ட அளவிலேயே பேணப்பட்டு வருகின்றன. எப்படியாயினும், சிரியாவின் மத்திய தரைக்கடல் (Mediterranean Sea) உடனான புவியியல் இணைவு மற்றும் சிரியாவின் சாத்தியப்பாடுள்ள மீள்கட்டுமான வேலைத்திட்டங்கள் போன்றவை, சீனாவின் நீண்டகால முதலீட்டு திட்டங்களுக்கு சாத்தியமானவையாகவே இருக்கின்றன.
இதற்கிடையில் சீனாவின் தலைநகர் பெய்ஜிங் (Beijing) நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் தற்போது கவலையிலும் பெருங்கவனத்திலும் இருக்கிறது. அசாத்-சிரிய ஆட்சிக்கவிழ்ப்பில் ஊய்குர் (Uyghur) துருக்கித்தான் இசுலாமிய கட்சி (Turkistan Islamic Party -TIP) போராளிகளின் வகிபாகமானது, சீனாவின் யின்யியாங் (Xinjiang) மாகாணத்தில் ஒரு போராட்ட பயத்தினை ஏற்படுத்தியிருக்கிறது. இம்மாகாணம் பண்டைய பட்டுப்பதை வர்த்தகத்தில் மத்திய கிழக்கை சீனாவுடன் இணைப்பதில் முக்கிய பங்காற்றியதுடன், ஊய்குர் (Uyghur) இனத்தவர்கள் அதிகம் செறிந்து வாழும் இடமாகவும் இருந்துவருகிறது. அண்மைக்கால துருக்கித்தான் இசுலாமிய கட்சியின் (Turkistan Islamic Party -TIP) சீன பிராந்தியத்துள் நெருக்கடிகளை ஏற்படுத்தும் செயற்பாடுகள், சீனாவின் உறுதிப்பாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் நிலையை உருவாக்கியிருக்கின்றன. இந்த விடயமானது நீண்டகாலமாக ஊய்குர் (Uyghur) மக்களின் உரிமைக்காக ஆதரவைகொடுத்துவரும் துருக்கிக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவினில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அதேவேளை இது மத்திய கிழக்கில் சீனாவின் இராசதந்திர நகர்வுகளை மேலும் சிக்கலடையச்செய்யும்.
இப்படியான சவால்களுக்கு மத்தியில், சீனா சிரியாவில் ஏற்பட்டுள்ள அதிகார மாற்றத்தினை கவனமாக அவதானித்து வருகிறது. துருக்கியின் வளர்ந்துவரும் பிராந்திய செல்வாக்கு மற்றும் பட்டுப்பாதைத்திட்டத்தில் சீனாவுடன் பேணும் உறவு என்பன, சிரியாவின் ஆட்சிக்கவிழ்ப்பிற்கு பிந்திய மீள்கட்டுமான நடவடிக்கைகளுக்கு சீனா வழங்கப்போகும் பங்கெடுப்புக்கு ஆதரவளிப்பதாக இருக்கலாம். எவ்வாறாயினும், சீனா, தனது பொருளாதார முன்னுரிமைகள், பாதுகாப்பு விடயங்கள் மற்றும் பிராந்திய முக்கிய சக்திகளான ஈரான், ரசியா, துருக்கி போன்ற தரப்புக்களுடனான உறவுகள் என்பவற்றை கருத்தில் கொண்டே, நிதானமாக நகரவேண்டிய நிலையிலான இச்சூழலை எதிர்கொண்டு நிற்கிறது.