எத்தியோப்பியா மற்றும் சோமாலியா எத்தியோப்பியாவின் கடல்சார் அணுகல் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான ஒரு கட்டமைப்பை ஏற்றுக்கொண்டதன் மூலம் ஆப்பிரிக்காவின் கடற்பாதை சார் பிராந்தியத்தில் (Horn of Africa) ஒரு குறிப்பிடத்தக்க அரசியல், பொருளாதார மாறுதல் ஏற்பட்டிருக்கிறது. துருக்கியினால் மத்திநிலை செய்யப்பட்டு எட்டப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம், எத்தியோப்பியாவின் கடல் சார் தேவைகளுக்கான யிபூட்டி (Djibouti) உடனான தங்கு நிலையில் உள்ள நீண்டகால முரண்பாடுகளுக்கு தீர்வுகளை காணவும், சோமாலியாவிலிருந்து தனித்த, சுதந்திர பிரதேசமாக அறிவிக்கப்பட்ட சோமாலிலாந்து (Somaliland) உடனான எத்தியோப்பியாவின் சர்ச்சைக்குரிய அணுகுமுறை தீர்வு காணவும் என உருவாக்கப்பட்டிருக்கிறது.
2024 இன் ஆரம்பந்த்தில் எத்தியோபியா சோமாலிலாந்துடன் பர்பரா (Berbera) துறைமுக பயன்பாட்டுக்காக செய்திருந்த ஒப்பந்தம், எத்தியோப்பியாவுக்கும் சோமாலியாவுக்கும் இடையில் முறுகல் நிலைகளை அதிகரித்திருந்தது. சோமாலியாவுடனான இந்த முறுகல் நிலை, சொமாலியா சோமாலிலாந்தை தனது இறைமைக்குட்பட்ட பிரதேசமாக கருதுவதனாலேயே ஏற்பட்டிருந்தது. சோமாலியா சோமாலிலாந்துடனான எத்தியோப்பியாவின் அணுகுமுறையை பிரிவினைக்கான ஆதரவு எனும் கண்ணோட்டத்தில் பார்ப்பதோடு, மேலும் தனது இறைமைக்கு இது ஆபத்தாக இருக்கும் என்றே கருதுகிறது. இந்த நிலையிலேயே துருக்கி, இரு நாடுகளுடனும் தனது ஈருக்கமான உறவை பேணுவதன் மூலம் இரு தரப்புக்கும் இடையிலான பிணக்குகளை தீர்ப்பதற்காக, தனது மத்திநிலையை பேணி, மூன்று கட்ட பேச்சுவார்த்தையை நடாத்தியிருந்தது. இதன் அடிப்படையிலேயே இவ்வாறானதொரு திருப்புமுனை ஆப்பிரிக்காவின் கடற்பாதை சார் பிராந்தியத்தில் (Horn of Africa) ஏற்பட்டிருக்கிறது. இவ்வுடன்படிக்கையானது 2025ம் ஆண்டு எப்ரல் மாதமளவில் இறுதிசெய்யப்படவிருப்பதோடு, இவ்வுடன்படிக்கை எத்தியோப்பியாவின் கடல் சார் அணுகல் தேவைகளை சோமாலியாவின் இறைமைக்குட்பட்டு செயற்படுத்துவதை உறுதிசெய்கிறது.
இவ்வுடன்படிக்கை எத்தியோப்பியாவினை பொறுத்தவரை அதனது பொருண்மியத்துக்கு நெருக்கடிகலை விளைவித்த யிபூட்டி (Djibouti) உடனான தங்கு நிலைக்கான மாற்றுத்தீர்வாக அமைகிறது. சோமாலியா தனது ஆள்புல இறைமையினை (Territorial Integrity) பாதுகாத்துக்கொள்வதோடு, தனது பிராந்தியத்தின் ஒரு முக்கிய தரப்பாக தன்னை முன்னிறுத்திக்கொள்கின்றது. துருக்கி இவ்வுடன்படிக்கை உருவாக்கத்தில் முக்கிய பங்கை வகிப்பதன் மூலம், ஆபிரிக்க கண்டத்தில் ஒரு சக்திமிக்க அதிகார தரகர் என்ற நிலையை வலுப்படுத்தியிருக்கிறது. மேலும் துருக்கி வர்த்தக நிறுவனங்கள் இவ்வுடன்படிக்கையுடன் தொடர்புடைய உட்கட்டமைப்பு திட்டங்களை (Infrastructure projects) செயற்படுத்தி பயனடைய தயாராகவிருக்கும் அதே நிலையில், இது துருக்கியின் செல்வாக்கினையும் உறுதிசெய்கிறது.
எவ்வாறாயினும், இவ்வாறானதொரு முயற்சிகள் எட்டப்பட்டு உடன்படிக்கையும் செயற்படுத்தப்படவிருக்கும் நிலையிலும், இப்பிராந்திய சவால்களும் இருக்கவே செய்கின்றன. சோமாலியாவுடனான எத்தியோப்பியாவின் முன்னைய உடன்படிக்கை, தீர்வினை எட்டப்படாத நிலையில் இருக்கும் அதே வேளை, சோமாலியாவின் அதிகார எல்லைக்கு உட்பட்ட எத்தியோப்பியாவின் கடல் சார் அணுகல் குறித்த விபரங்கள் தெளிவாக இல்லை. இவ்வாறான தெளிவின்மைகளும், பிராந்திய போட்டியாளர்களான, எகிப்து போன்ற தரப்புகளின் இவ்வுடன்படிக்கை தொடர்பான அணுகுமுறைகளும், மீண்டும் இப்பிராந்தியத்தில் ஒரு பதட்ட நிலையை மீண்டும் தூண்டலாம் என கணிக்கப்படுகிறது. இருப்பினும், துருக்கியின் இவ்வெற்றிகரமான நகர்வானது ஆப்பிரிக்காவின் கடற்பாதை சார் பிராந்தியத்தின் (Horn of Africa) பூகோள அரசியலை தீர்மானிக்கும் பங்கை அது வலுவாக்கி வருகிறது என்பதை தெளிவாக கோடிட்டு காட்டுகிறது.