அரபு வசந்த புரட்சியினை தொடர்ந்து, தசாப்தத்தினை தாண்டி முன்னெடுக்கப்பட்டு வரும் அசாத் அரசுக்கெதிரான போராட்டத்தில், கடந்த நா தக்ரிர் அல்-சாம் எனும் இசுலாமிய அமைப்பு, சிரிய அரசின் ஆட்சியை வீழ்த்தி புதிய திருப்புமுனையை நிகழ்த்தியிருக்க்கிறது.
யாரும் இலகுவில் எதிர்பார்த்திராத இந்த நிகழ்வு, அசாத்-சிரிய ஆட்சிக்கட்டமைப்ப்புக்குள் இருந்த நலிவானதன்மைகளையும், தசாப்தங்கள் கடந்த கருத்தியல் உட் பிளவுகளையும் மற்றும் அரசியல், பொருண்மிய பின்னடைவுகளையும் வெளிச்சத்தில் காட்டியிருக்கிறது. ஆரம்பத்தில் ரசிய, ஈரானிய மற்றும் கிசுபுல்லா ஆகிய தரப்புகளின் ஆதரவில் கட்டமைக்கப்பட்டிருந்த அசாத் அரசு, உட்பிளவுகள், பிராந்திய அதிகார போட்டிகள் மற்றும் சில சர்வதேச நகர்வுகளால் முற்றிலும் உடைக்கப்பட்டிருக்கிறது.
அசாத்தின் வீழ்ச்சியானது அவரது பாஅத் (Ba’ath) கட்சியின் வீழ்ச்சியாக அல்லது பாஅத் கருத்தியலின் முடிவாக மட்டும் அல்லாமல், சிரியா எனும் தேசம் பிரிவுகளுக்குட்படும் பாதுகாப்பற்ற சூழலை நோக்கி தள்ளப்பட்டிருக்கிறது. ஆட்சிக்கவிழ்ப்பில் ஈடுபட்ட பல்வேறு ஆயுத, அரசியல் அமைப்புக்கள் சிரியாவின் எதிர்காலம், நவீனமயமாக்கல், மீள்கட்டுமானம் பற்றி உறுதியளித்தாலும், நடந்துகொண்டிருக்கும் குழுவாத வன்முறைகள், பழங்குடிகளுக்கிடையான மோதல்கள் மற்றும் யுத்தப்பிரபுத்துவம் என்பன, சிரியாவின் எதிர்காலம் என்பது இருளுக்குள் தள்ளப்படலாம் என்பதையே காட்டி நிற்கின்றன. இப்பிராந்தியத்தில் வல்லமை பொருந்தியவர்களாக இருக்கும் துருக்கி, ஈரான் மர்றும் இசுரேல் ஆகிய நாடுகள் சிரியா ஏற்படுத்தியிருக்கும் பிராந்திய அதிகார இடைவெளியை நிரப்பவே முயல்கின்றன என்பதால், இந்த நகர்வுகள் சிரிய தேசத்தின் மீள் எழுச்சிக்கான மற்றும் உறுதிப்பாடுடைய தேசத்துக்கான நகர்வை மேலும் சிக்கலாக்குகின்றன,
உலக அளவில் இதன் விழைவுகள் ஆழமானவை. ஈரானைப்பொறுத்தவரையில் சிரியாவின் அதன் ஆதிக்கத்தை இழப்பதென்பது, ஈரானின் பிராந்திய ஆளுக்கைக்கான வலுவிற்கு கிடைக்கும் பெரும் பின்னடைவாகும். இதற்கிடையில் துருக்கி, சிரிய தேசத்தில் வாழும் குர்திசு இன (Kurdish) மக்களின் போராட்ட நியாயப்பாட்டினை எதிர்த்து சிரிய தேசத்தில் தன் செல்வாக்கை மேம்படுத்தியும் விரிவுபடுத்தியும் தனது காலூன்றலை வலுவாக்க நகர்வுகளை மேற்கொள்கின்றது. இன்னொரு புறத்தே இசுரேல், தனது எல்லைகளை பாதுகாக்கவென, சிரிய படைத்துறை வளங்களை அழிப்பதன் மூலம், ஒரு படைய நகர்வை உடனடியாகவே ஆரம்பித்திருக்கிறது.
இங்கு உலகளாவிய ரீதியில் வல்லரசு நாடுகளின் தாங்கங்களின் பங்கே அதிகம். ரசியா தனது ஒரு மூலோபாய கூட்டாளியின் இழப்பினை எதிர்கொள்கின்றது. இது ரசியாவின் மத்திய கிழக்கு மீதான செல்வாக்கினில் பின்னடைவுகளை ஏற்படுத்துகிறது. அமெரிக்கா இந்த விடயத்தில் இரு பக்கங்களுடன் நகர்கிறது. சிரியாவில் ஈரானின் செல்வாக்கை சேதப்படுத்துவதன் மூலம், ஈரானின் பிராந்திய செல்வாக்கில் சரிவினை ஏற்படுத்த, சிரியாவின் கிளர்ச்சி அமைப்புகளை பலப்படுத்தும் நொக்கில் நகர்வதுடன், மறுபுறம் அந்த கிளர்ச்சி அமைப்புகளால் தாம் ஏதிர்கொள்ளக்கூடிய சவால்கலையும், ஆபத்தையும் எதிர்கொள்கிறது. புவியியல் அடிப்படையில் இப்பிராந்தியத்தில் சற்று தொலைவில் உள்ள சீனா, அதன் நீண்டகால முயற்சியான வர்த்தகப்பாதை (Belt & Road) ஈரானில் ஏற்பட்டிருக்கும் மாறுதல்களால் எதிர்கொள்ளப்போகும் சவால்களை எதிர்நோக்கியுள்ளதுடன், அதன் யின்யியாங் (Xinjiang) மாகாணத்தில் ஏற்பட்டிருக்கும் இசுலாமிய கிளர்ச்சி ஏற்படுத்தப்போகும் விளைவுகளையும் கவனித்தபடி இருக்கிறது.
தற்போது நடந்துள்ள அசாத்-சிரிய ஆட்சிக்கவிழ்ப்பானது, எவ்வாறு ஒரு தேசத்துள் நடைபெறும் மோதல் நிகழ்வுகள், பிராந்திய மற்றும் உலகளாவிய அதிகார போர்களை தூண்டலாம் அல்லது இதன் மாறுதலாக எவ்வாறு பிராந்திய மற்றும் உலகளாவிய அதிகார போட்டிகள், ஒரு தேசத்தின் இயங்கு நிலையை குலைப்பதினூடாக அல்லது மாற்றத்திற்குட்படுத்துவதினூடாக முன்னெடுக்கப்படும் என்பதனை வெளிப்படையாகவே காட்டி நிற்கின்றது.