இலங்கை தமிழரசுக் கட்சியின்; யாப்பை மீறி மத்தியகுழு எடுக்கும் தீர்மானங்களுக்குத் தடை உத்தரவொன்றைப் பிறக்குமாறு கோரி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மத்தியகுழு உறுப்பினருமான வைத்தியர் சி.சிவமோகனினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியச் செயற்குழுக் கூட்டம் வவுனியாவில் கடந்த 14 ஆம் திகதி இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தை ஆரம்பிப்பதற்கு இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் பத்மநாதன் சத்தயலிங்கம் முற்பட்டபோது, கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வருகை தராமல் கூட்டத்தை நடத்தக் கூடாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் கூறியிருந்தார்.
எனினும், அவர் தலைவர் பதவியிருந்து விலகிவிட்டார் எனவும் அவரின் தலைமையில் கூட்டத்தை நடித்த முடியாது எனவும் சிலர் கோரியிருந்தனர்.
எவ்வாறாயினும், தமது நிலைப்பாட்டில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் விடாப்பிடியாக இருந்தமையினால் நீண்டநேரமாகக் கூட்டம் ஆரம்பிக்கப்படாமல் அமைதியின்மை நிலவியது.
பின்னர் கூட்டத்துக்கு மாவை சேனாதிராஜா வருகைதந்தபோது, பதவி விலகியவர் தலைமையில் கூட்டத்தை நடத்த முடியாது எனச் சிலர் தெரிவித்தனர்.
அதேநேரேம், பதவி விலகலை மாவை சேனாதிராஜா மீளப் பெற்று விட்டதாகவும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
இந்த நிலையில், மாவை சேனாதிராஜாவின் பதவி விலகலை மீளப்பெற அனுமதிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் எதிர்வரும் 28 ஆம் திகதி அடுத்த மத்தியக் குழுக் கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தி முடிவெடுப்பதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கை தமிழரசுக் கட்சியின் யாப்பு விதிமுறைகளை மீறி மத்தியக் குழு எடுக்கின்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும், தீர்மானங்களுக்கும் தடை உத்தரவு கோரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
குறித்த வழக்கு எதிர்வரும் நாட்களில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்ப்பதாக மனுதாரர் தரப்பு தெரிவித்துள்ளது.
கட்சியின் கொள்கைகளை வகுப்பதும், செயற்திட்டங்களை வகுப்பதும் கட்சியின் பரிபாலனமும், தலைவர் தெரிவும் பொதுச்சபையின் ஆணைக்கு உட்பட்டவை என்றும், அவ்வாறான தீர்மானங்களைக் கட்சியின் மத்தியக் குழுவினால் எடுக்க முடியாது எனவும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.