காலநிலை மாற்றத்துக்கான ஐக்கிய நாடுகள் சபையின் 29வது உச்சி மாநாடு அசர்பைஜான் நாட்டிலுள்ள பாகுவில் நவம்பர் 11ஆம் தேதி தொடங்கியுள்ளது. புவி வெப்பமயமாதலை 1.5 °Cக்கு மேல் உயராமல் தடுப்பதற்கு உலக நாடுகள் இணைந்து சாத்தியமுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்வார்களா என அனைவரும் எதிர்பார்ப்பில் ஆழ்ந்துள்ளனர்.
இந்த நிலையில் புவி வெப்பமயமாதலின் தற்போதைய நிலவரத்தை உலக நாடுகளுக்கு உணர்த்து வகையில் State of the Climate 2024 எனும் அறிக்கையை உலக வானிலை அமைப்பு நேற்று வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, 2024ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் புவியில் நிலவிய சராசரி மேற்பரப்பு வெப்பநிலையானது தொழிற்புரட்சி காலத்தில் (1850-1900) நிலவிய சராசரி வெப்பநிலையைக் காட்டிலும் 1.54±0.13°C அதிகமாக இருந்ததாக உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டதில் மிகவும் வெப்பமான ஆண்டாக 2024 அமையும் உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது. எனினும் இது தற்காலிக உயர்வுதான். நீண்டகால புவியின் சராசரி வெப்பநிலை உயர்வானது தற்போது 1.3 °Cஆக உள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் நிலவிய சராசரி வெப்பநிலையைவிட அதிகம் என உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக வானிலை அமைப்பின் தலைவர் செலஸ்டே சாலோ “ வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளம், வேகமாக தீவிரமடைந்து வரும் வெப்பமண்டல சூறாவளிகள், கொடுமையான வெப்பம், இடைவிடாத வறட்சி மற்றும் இந்த ஆண்டு உலகின் பல்வேறு பகுதிகளில் நாம் கண்ட காட்டுத்தீ ஆகியவை கெடுவாய்ப்பாக நம் உலகின் புதிய இயல்பு மற்றும் நமது எதிர்காலத்திற்கான முன்னறிவிப்பு” எனக் கூறினார்.
பசுமை இல்ல வாயுக்களின் அளவு 2023இல் புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக இவ்வறிக்கை குறிப்பிடுகிறது. 2024ஆம் ஆண்டிலும் அவை தொடர்ந்து உயர்ந்து வருவதாக நிகழ்நேர தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. வளிமண்டல த்தில் கார்பன் டை ஆக்சைடின் (CO2) செறிவு 1750ஆம் ஆண்டில் 278 ppm இருந்த நிலையில் 2023 ஆம் ஆண்டில் 420 ppm ஆக அதிகரித்துள்ளது. இது 51% உயர்வாகும். இந்த அளவிற்கான கார்பன் டை ஆக்சைடின் செறிவு வெப்பத்தை உறிஞ்சி வைத்துக்கொண்டு புவியின் வெப்பநிலையை அதிகரிக்கச் செய்கிறது.
2014 – 2023 காலத்தில் உலகளாவிய சராசரி கடல் மட்டம் ஆண்டுக்கு 4.77 மிமீ என்ற விதத்தில் உயர்ந்தது. இது 1993 மற்றும் 2002 க்கு இடையிலான காலத்தில் இருந்த உயர்வைவிட இரு மடங்காகும். அமெரிக்கா, ஐரோப்பாவில் பனிப்பாறை உருகுதலும், அண்டார்டிகாவின் பனி நிறைந்த கடற்பரப்பு வேகமாகச் சுருங்குவதும் அதிகரித்திருப்பதாக இந்த அறிக்கை எச்சரிக்கிறது.
புவி வெப்பமயமாதலைத் தடுப்பதற்கான உலக நாடுகளின் செயல்திட்டங்கள் எதுவும் 1.5 °C க்குள் புவியின் வெப்பநிலை உயர்வைத் தடுக்க போதுமானதாக இல்லை என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் அடுத்த 2 வாரம் நடக்கும் காலநிலை உச்சி மாநாட்டில் தீர்க்கமான முடிவுகளை உலக நாடுகள் எடுத்தால் மட்டுமே பேரிடர்கள் மட்டுமே நிறைந்த இப்புதிய இயல்பை நாம் மாற்ற முடியும்.