வரலாற்றில் பதிவானதிலேயே மிகவும் வெப்பமான ஆண்டாக 2024 அமையும் என உலக வானிலை அமைப்பு அறிவித்துள்ள நிலையில் புவி வெப்பமயமாதலுக்கு முக்கியக் காரணங்களில் ஒன்றான கார்பன் டை ஆக்சைடின் (CO2) உமிழ்வு 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டில் 0.8% அதிகரித்திருப்பதாக Global Carbon Project எனும் அறிவியலாளர்கள் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புவியின் சராசரி வெப்பநிலை உயர்வை 1.5 °Cக்குள் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உலக நாடுகள் உள்ள நிலையில் நடப்பாண்டின் உலகளாவிய CO2 உமிழ்வு 41 பில்லியன் டன்னாக இருக்கும் எனவும் இது கடந்த ஆண்டில் 40.6 பில்லியன் டன்னாக இருந்தது என இவ்வறிக்கை குறிப்பிடுகிறது.
பன்னாட்டளவில் 120 அறிவியலாலர்களின் பங்களிப்புடன் வெளியான இந்த ஆய்வறிக்கை பல எச்சரிக்கைகளை வழங்கியுள்ளது. ”காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் வியக்கும் வகையில் மாறி வருகின்றன, இருப்பினும் புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாடு உச்சத்தை எட்டியதற்கான எந்த அறிகுறியையும் நாங்கள் இன்னும் காணவில்லை” என்று இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கிய எக்ஸிடெரின் குளோபல் சிஸ்டம்ஸ் இன்ஸ்டிடியூட்டின் பேராசிரியர் பியர் ஃப்ரீட்லிங்ஸ்டீன் கூறினார். (புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டின் உச்சநிலை எட்டப்படவில்லை என்பதற்கான அர்த்தம் இன்னும் அவற்றின் உமிழ்வு அதிகரிக்கும் என்பதும் இதனால் புவி மேலும் வெப்பமடையும் என்பதாகும்).
உலகளவில் புதைபடிவ கார்பன் டை ஆக்சைடின் உமிழ்வில் சீனாவின் பங்கு 32% ஆகவும், அமெரிக்காவின் பங்கு 13% ஆகவும், இந்தியாவின் பங்கு 8% ஆகவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பங்கு 7% ஆகவும் இருப்பதாக இவ்வறிக்கைக் குறிப்பிடுகிறது. இதில் சீனாவின் பங்கு 0.2% அதிகரிக்கவும், அமெரிக்காவின் பங்கு 0.6% குறையவும், இந்தியாவின் பங்கு 4.6% அதிகரிக்கவும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பங்கு 3.8% குறையவும் வாய்ப்பிருப்பதாக அறிவியலாளர்கள் கணித்துள்ளனர். இதே நிலையில் உமிழ்வு தொடர்ந்தால் இன்னும் 6 ஆண்டுகளில் புவியின் சராசரி வெப்பநிலை 1.5 °C அளவுக்கு உயர 50% வாய்ப்பிருப்பதாக இந்த ஆய்வை மேற்கொண்ட அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்தியாவைப் பொருத்தமட்டில் ஒட்டுமொத்த உமிழ்வில் நிலக்கரியின் பங்கு 4.5%, எண்ணெய் பயன்பாடின் பங்கு 3.6%, இயற்கை எரிவாயுவின் பங்கு 11.8%, சிமெண்ட் உற்பத்தியின் பங்கு 4.0% அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக இவ்வறிக்கை கணித்துள்ளது.
எல் நினோ எனும் காலநிலை நிகழ்வின் விளைவால் 2023 ஆம் ஆண்டில் நிலத்தில் உள்ள சுற்றுச்சூழல் அமைவுகளால் கார்பன் உறிஞ்சப்படுவது குறைந்தது. இது 2024 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் எல் நினோ முடிவடையும் போது மீண்டும் சரியாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
CO2 உமிழ்வு 2014-2023 காலத்தில் 22 நாடுகளில் குறைந்துள்ளதாகவும், அதே நேரத்தில் இந்நாடுகளின் பொருளாதாரம் உயர்ந்திருப்பதாக இவ்வறிக்கை குறிப்பிடுகிறது.
விரிவான அறிக்கைக்கு: https://globalcarbonbudget.org/fossil-fuel-co2-emissions-increase-again-in-2024/