நாடாளுமன்றத்திலும் நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் பன்னாடுகளிலும் குரல் கொடுக்க கூடியவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்புதல் வேண்டும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று (10.11.2024) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும், “தேசிய மக்கள் சக்தியை கேடயமாகக் கொண்ட மக்கள் விடுதலை முன்னணி நாடாளுமன்றத்தை தமதாக்குவதற்கு முன்பே வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயக தேசிய அரசியலுக்கு எதிரான போரை ஆரம்பித்துள்ளது.
தமிழ் தேசியம்
அன்றைய போர்க்காலத்தில் சிங்கள – பௌத்த இனப்படுகொலை ஆட்சியாளர்கள் தமிழ் ஆயுதக் குழுக்களை பாவித்ததை போன்று எம்மத்தியில் தமிழ் தேசியத்துக்கு எதிரான சக்திகளை தேர்தல் களத்தில் இறக்கியுள்ளனர்.
இன்னும் பலர் திருவிழா கால வியாபாரிகள் போன்று உழைப்புக்காக சுயமாகவும் இறங்கி உள்ளனர். அவர்களோடு சேர்ந்து சுயநல சுக போக அரசியல்வாதிகளும் போலி தேசியம் பேசி வாக்கு வேட்டையாட முற்படுகின்றனர்.
இவர்களை வடக்கு – கிழக்கு தமிழ் தேசிய பற்றாளர்கள் தமது வாக்கினால் வீழ்த்த வேண்டும். அதுவே மாவீரர் மாதத்தில் மாவீரர்களுக்கு நாம் செய்யும் கௌரவமாகும். எம் தேச விடுதலைக்காக தீரமுடன் செயல்படுவோர்க்கு வாக்களித்து தேசம் காக்குமாறும் வேண்டுகோள் விடுகின்றோம்.
நாடாளுமன்ற தேர்தல்
தற்போதைய ஜனாதிபதி தனது பதவிக்கதிரையில் அமரும் முன்பே “யுத்த குற்றங்கள் தொடர்பாக உள்நாட்டிலேயே விசாரணை நடக்கும். ஆனால் எவரும் தண்டிக்கப்பட மாட்டார்கள்” என்றார். அதிபர் பதவியில் அவர் அந்த பின் அமைக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பின்பற்றி “ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51/1 தீர்மானத்தை ஏற்க மாட்டோம்” எனக் கூறினார்.
அவரே தற்போது “சமஸ்டி தீர்வுக்கு இடமே இல்லை” எனவும் கூறியுள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா அவர்கள் “13 திருத்தமும் அதிகாரப் பகிர்வும் வடக்கு மக்களுக்கு தேவை இல்லை. பொருளாதாரப் பிரச்சினைக்கான தீர்வே அவசியம்” என்றார்.
இவை எல்லாம் தமிழர்களை அரசியல் போருக்கு அழைப்பதாகவே பொருள்கோடல் வேண்டும். இவற்றிற்கு எதிராக அரசியல் போர் தொடுக்க கூடியவர்களையே எம் தேசத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்” என தெரிவித்துள்ளார்.