யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு புதிய பொதுச் செயலாளராக கலைப்பீடத்தைச் சேர்ந்த சி.சிவகஜன் தேர்வாகியுள்ளார். இதுவரை காலமும் பொதுச் செயலாளராகப் பொறுப்பு வகித்த சோ.சிந்துஜன் அவர்களினது பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் சிவகஜன் தேர்வாகியுள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பொதுச் செயலாளராக இதுவரை காலமும் பொறுப்பு வகித்த சோ.சிந்துஜன் அவர்களுடைய காலத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உறுதியான தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுடன், கட்டமைப்பு மற்றும் பண்பு மாற்றங்களை நோக்கி மாணவர் ஒன்றியத்தையும், மாணவர்களையும் இட்டுச் சென்றது. மாணவர்களை அரசியற்படுத்தி, அணி திரட்டுவதிலும், மாற்று செயல் வடிவங்களை பல்கலைக்கழகத்திலே நடைமுறைப்படுத்துவதிலும் அதிக கவனம் செலுத்தியமையும் கடந்த காலங்களில் அவதானிக்கக் கூடியதாகவிருந்தது.
மேலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பல்கலைக்கழகத்தின் 12 பீடங்களினதும் மாணவர் ஒன்றியங்கள் மற்றும் மாணவர்களை ஒருங்கிணைக்கும் தொழிற்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.