சிறிலங்காவின் சிறைகளுக்குள் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியற் கைதிகளை நினைவுகூர்ந்தும் சிறையிலிருந்து விடுவிக்கப்படாத உறவுகளின் விடுதலை வேண்டி அணி திரளுமாறு தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலைக்காக பணியாற்றும் “குரலற்றவர்களின் குரல்” இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.
கடந்த 05.07.2025 அன்று குரலற்றவர்களின் குரல் இயக்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கை, சனநாயக சோசலிச குடியரசு எனும் பெயரை தாங்கி நிற்கிறது. ஆனாலும் இந்த சனநாயக சோசலிசம் வெளிப்படுத்தும் விழுமியங்களுக்கு மாறாக ஒடுக்கும் அரசாகவே இவ்அரசு பரிணமித்துள்ளது. இந்த அரசினது இரும்புச் சிறைகளுக்குள் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிர் பறிக்கப்பட்ட எமது உறவுகளான தமிழ் அரசியல் கைதிகளை உணர்வுபூர்வமாய் மனங்கொள்ள வேண்டியது தமிழ் மக்களாகிய நம் ஒவ்வொருவரதும் கடமையாகும்.
சுதந்திர வாழ்வின் உரிமைக்காக நித்தமும் போராடிக் கொண்டிருக்கின்ற எமது தமிழினத்தை சட்டத்தின் பெயரால் அடக்கி ஒடுக்குவதற்கென்று ஆதிக்க அரசினால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்றவற்றின் கீழ் இனவிடுதலையின் பெயரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை நாம் மறந்து விடலாகாது.
நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளிலும் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் வெவ்வேறு காலப்பகுதிகளில் மனிதாபிமானமின்றி கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான எமது உறவுகளை நினைவேந்துவதுடன், 30 ஆண்டுகள் கடந்தும் விடுதலை இன்றி இன்றுவரை சிறைக்கூடங்களுக்குள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் சுதந்திர விடியலுக்காக கரம் கோர்த்து குரலுயர்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும்.

தமிழினத்தை வேரறுக்கும் வரலாற்றின் முதல் அத்தியாயமான ‘ஜூலைக் கலவரத்தின் சிறைப்படுகொலை நாள் ஜூலை 25 ஐ முன்னிறுத்தி,
“சிறைகளுக்குள் படுகொலை செய்யப்பட்ட உயிர்களுக்கு சிரம் சாய்த்து நினைவேந்தி…!
இன்று வரை சிறையிலே வாடும் உறவுகளின் விடுதலைக்கு வழியமைப்போம்…! “
அரசியல் கைதிகளின் விடுதலைக்கான உணர்வுபூர்வமான போராட்டத்தை முனைப்புடன் முன்னெடுக்க “குரலற்றவர்களின் குரல்”அமைப்பு சகல தமிழ் சமூகங்களிடமும் அழைப்பு விடுக்கின்றது.
நினைவேந்தலை வலுப்படுத்தி விடுதலைக்கு வழிசமைக்க ஈழத்து சூழலில் மட்டுமன்றி அயலகமான தமிழகம், புலம்பெயர்ந்து வாழ்கின்ற பன்னாட்டு தமிழ் உணர்வாளர்கள், தமிழர் அமைப்புகள், மனித உரிமைவாதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூக அமைப்புக்கள், ஜனநாயக சக்திகள் என அனைத்து தரப்பினரிடமும் அந்தந்த நாடுகளில் இதேபோன்ற உணர்வுபூர்வ கவனக் குவிப்பு நிகழ்வுகளுக்கான ஒத்துழைப்பையும் ஆதரவையும் உரிமையோடு வேண்டி நிற்கின்றோம்.
எதிர்வருகின்ற 24 மற்றும் 25ஆம் திகதிகளில், யாழ்ப்பாணம் கிட்டு பூங்கா (சங்கிலியன் பூங்கா) சுற்றயலில் இடம்பெறும் இந்த நினைவேந்தல் செயற்பாட்டில் சமூக உணர்வு கொண்ட அனைத்துத் தரப்பினரும் தவறாது பங்கேற்று, ஒன்றிணைந்து குரல்களை உயர்த்தி உறவுகளின் விடுதலைக்கு அணி திரண்டு வலுச் சேர்ப்போம். என்று குறிப்பிடப்பட்டுள்ளது.