திருகோணமலை, கன்னியா வெந்நீரூற்றுக்கு அருகிலுள்ள சுமார் மூன்று ஏக்கர் காணி, திருகோணேஸ்வரர் ஆலயத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட நிலையில், சிங்கள குடியேற்றவாசிகளால் சட்டவிரோதமாகக் கட்டடங்கள் கட்டப்பட்டு ஆக்கிரமிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளதால் பதற்றங்கள் அதிகரித்துள்ளன.
கன்னியா வெந்நீரூற்றுகளுக்கு அருகில் அமைந்துள்ள இந்தக் காணி, அதன் உரிமையாளர்களால் திருகோணேஸ்வரர் ஆலயத்திற்கு சட்டப்பூர்வமாக நன்கொடையாக வழங்கப்பட்டது. எனினும், அண்மைய வாரங்களாக, வெளியூர் சிங்கள குடியேற்றவாசிகள் இந்த நிலத்தில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை மேற்கொண்டு வருகின்றனர். இது ஒருங்கிணைக்கப்பட்ட காணி அபகரிப்பு குறித்த அச்சத்தைத் தூண்டியுள்ளது.
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையால் அங்கீகரிக்கப்படாத எந்தவொரு கட்டுமானத்தையும் தடைசெய்யும் கட்டளையை குறித்த சிங்களக் குடியேற்றவாசிகள் புறக்கணித்துள்ளதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர். இந்தக் கட்டளையை தொடர்ச்சியாக மீறி வருவது தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்செயலை வடக்கு – கிழக்கில் திட்டமிட்ட காணி அபகரிப்பின் ஒரு பகுதியாக அவர்கள் பார்க்கின்றனர்.

சம்பந்தப்பட்ட உள்ளூர் அதிகாரிகளிடம் முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதிலும், கட்டுமானத்தை நிறுத்தவோ அல்லது நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தவோ எந்த அர்த்தமுள்ள நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். சிறிலங்கா அரசின் இந்த பதிலற்ற தன்மை, உள்ளூர் மக்களின் விரக்தியை ஆழப்படுத்தி, இப் பிரதேசத்தில் தமிழ் பண்பாடு மற்றும் மதத் தலங்களின் தொடர்ச்சியான சிதைவு குறித்த கவலைகளை தமிழர்களிடையே அதிகரித்துள்ளது.
திருகோணமலையில் உள்ள ஒரு முக்கிய சைவக் கோவிலான திருகோணேசுவரர் கோவிலில், தமிழ் சைவர்களிற்கு வரலாற்று மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்தது. மத மற்றும் வரலாற்று, பண்டைய தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கன்னியா வெந்நீரூற்றுகளுக்கு அருகாமையில் இக்கோவில் அமைந்துள்ளமை, இப் பிரதேசத்தின் கலாச்சார முக்கியத்துவத்தை மேலும் உயர்த்துகிறது.
சட்டவிரோத சிங்கள ஆக்கிரமிப்பைத் தடுக்கவும், கோவில்ச் சொத்தின் சட்டப்பூர்வ உரிமையைப் பாதுகாக்கவும் அவசர தலையீட்டிற்கு உள்ளூர் சமூகத்தினர் இப்போது அழைப்பு விடுத்துள்ளனர். ஆக்கிரமிப்பை நிறுத்தவும், நீதிமன்ற உத்தரவுகள் நிலைநிறுத்தப்படுவதை உறுதிப்படுத்தவும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகளை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் அரச ஆதரவுடனான சிங்களமயமாக்கல் முயற்சிகள் குறித்த வளர்ந்து வரும் கவலைகளுக்கு இந்தச் சம்பவம் மேலும் வலு சேர்க்கிறது. தமிழர்களின் மதத் தலங்களை இலக்கு வைப்பது மற்றும் காணி அபகரிப்பு மூலம் சனத்தொகை கையாளுதல் குறித்து தமிழர்கள் மீண்டும் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பொறுப்புக்கூறல் மற்றும் சட்ட அமுலாக்கமின்மை, மேலும் பல மீறல்களைத் தூண்டும் என குடியிருப்பாளர்கள் எச்சரிக்கின்றனர்.


