இம்மாத இறுதியில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நாட்டுக்கு வரும் பொழுது செம்மணிப் புதைகுழியைப் பார்வையிடுவார் என்று தெரிகிறது. அதை நோக்கி தமிழ் மக்கள் மத்தியில் உள்ள செயற்பாட்டு அமைப்புக்கள் போராட்டங்களை ஒழுங்குபடுத்தியுள்ளன.
ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு வரப் போகிறார் என்ற செய்தி கிடைத்ததும் கடந்த மாதம் 22 ஆம் திகதி சுமார் 35 தமிழ் குடிமக்கள் அமைப்புகள் இணைந்து ஐநா மனித உரிமைகள் ஆணையருக்கு ஒரு கடிதம் எழுதின.அதன் விளைவாக ஐநா அலுவலர்களுக்கும் தமிழ் குடிமக்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் ஒரு மெய்நிகர் சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்ட்து.ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நாட்டுக்குள் வரக்கூடாது என்று குடிமக்கள் அமைப்புக்கள் கேட்டிருக்கின்றன. ஏனென்றால், இப்போதுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஐநாவின் தீர்மானங்களை ஏற்றுக் கொள்ளவில்லை.உள்நாட்டு விசாரணையைத்தான் ஏற்றுக்கொள்ள முடியும் என்று கூறி வருகிறது. ஐநா மனித உரிமைகள் அலுவலகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிக் கொண்டிருக்கும் “சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான கட்டமைப்போடு” இந்த அரசாங்கம் ஒத்துழைக்கவில்லை. அக்கட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் நாட்டுக்குள் வருவதற்கு இன்றுவரை விசா வழங்கப்படவில்லை.
இப்படிப்பட்டதோர் பின்னணியில், ஐநா தீர்மானங்களை ஏற்றுக் கொள்ளாத, ஐநா மனித உரிமை அலுவலர்களை நாட்டுக்குள் வர அனுமதிக்காத ஒரு நாட்டுக்கு, மனித உரிமைகள் ஆணையாளர் வருவது அந்த அரசாங்கத்துக்குக் கொடுக்கப்படும் அங்கீகாரமாகக் கருதப்படும் என்று அந்தக் குடிமக்கள் சமூகங்கள் சுட்டிக்காட்டியிருந்தன. ஆனால் ஐநா மனித உரிமைகள் பேரவையோடு ஒத்துழைக்க மறுக்கும் ஓர் அரசாங்கத்தை அப்படியே வெளியில் விட முடியாது என்றும், அதை நெருங்கிச் சென்றுதான் அதன் தீர்மானங்களில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்றும், ஐநாவின் கண்காணிப்பு வளையத்துக்குள் அதை கொண்டு வரலாம் என்றும், ஒர் அபிப்பிராயம் ஐநா மட்டத்தில் உள்ளதாகத் தெரிகிறது.
இது இனப்பிரச்சினை தொடர்பில் இப்போதுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தைப் பொறுப்புக் கூற வைப்பதற்கான ஒரு முயற்சியாக வெளியில் தோன்றினாலும், இதற்குப்பின் பிராந்திய மற்றும் உலகளாவிய ராஜதந்திர உள்ளோட்டங்கள் உண்டு. இப்போது ஆட்சியில் இருப்பது சீன இடதுசாரிப் பாரம்பரியத்தில் வந்த ஜேவிபியை அடித்தளமாக கொண்ட ஒரு கட்சியாகும். இக்கட்டுரை எழுதப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு ஜேவிபியின் முடிவெடுக்கும் தலைவராகிய ரில்வின் சில்வா சீனாவில் காணப்பட்டார். எனவே சீனாவின் செல்வாக்குக்குள் விழக்கூடிய ஓர் அரசாங்கத்தை இயன்ற அளவுக்கு மேற்கின் செல்வாக்கு வளையத்துக்குள் பேணுவதுதான் மேற்கு நாடுகளின் தீர்மானமாக காணப்படுகிறது. இந்த அரசாங்கத்தை சீனாவை நோக்கித் தள்ளுவதற்குப் பதிலாக தாங்கள் அரவணைக்க வேண்டும் என்று இந்தியாவும் மேற்கு நாடுகளும் சிந்திக்கின்றன என்பதனைத்தான், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த அரசாங்கத்தோடு மேற்கும் இந்தியாவும் எவ்வாறு இடையூடாடி வருகின்றன என்பதை தொகுத்து அறியக்கூடியதாக உள்ளது. எனவே இந்த ராஜதந்திர இலக்கின் அடிப்படையில்தான் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்குள் வருகிறார் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த விடயத்தில் ஐநா குடிமக்கள் சமூகங்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளவில்லை. எனினும், அவ்வாறு மனித உரிமைகள் ஆணையாளர் நாட்டுக்குள் வருவாராக இருந்தால், அவர் இங்கு செம்மணிப் புதை குழியைப் பார்க்க வேண்டும் என்று குடிமக்கள் அமைப்புகள் விடுத்த கோரிக்கையை ஐநா ஏற்றுக் கொண்டுள்ளது. அந்த அடிப்படையில் அவர் இந்த மாத இறுதியில் இலங்கை வருகையில்,யாழ்ப்பாணத்துக்கும் வந்து செம்மணிப் புதை குழியைப் பார்வையிடுவார் என்று தெரிகிறது.
அவருடைய வருகையையொட்டி தமிழ் குடிமக்கள் சமூகங்களும் செயற்பாட்டு அமைப்புகளும் கவனயீர்ப்பு போராட்டங்களை ஒழுங்கு படுத்திவருகின்றன. ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு வருவதன்மூலம் அதுபோன்ற மனிதப் புதைகுழிகள் மீதான அனைத்துலக கவனக்குவிப்பு செறிவாக்கப்படும்.ஆனால் அது இப்போதிருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீதான அழுத்தமாக எப்பொழுது மாறும் ?
ஏன் இப்படிக் கேட்க வேண்டியுள்ளது என்று சொன்னால், இப்போதிருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது, நான் எனது கட்டுரைகளில் திரும்பத் திரும்பக் கூறுவது போல, ஒரு மிதவாத கட்டமைப்பில் இருந்து வந்தது அல்ல. மேட்டுக்குடி கட்டமைப்பும் அல்ல. அது ஒரு இயக்கம். இரண்டு தடவைகள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு, இரண்டு தடவைகள் தடை செய்யப்பட்டு, இரண்டு தடவைகள் நசுக்கப்பட்ட ஒரு இயக்கம். தன் சொந்தச் சாம்பலில் இருந்து மீண்டு எழுந்த ஒரியக்கம். எனவே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கண்ணீரையும் துயரத்தையும் இதற்கு முன்பு இருந்த எந்த ஓர் அரசாங்கத்தை விடவும் இந்த அரசாங்கம் நன்கு விளங்கிக் கொள்ள முடியும். ஏனென்றால் ஜேவிபியின் இரண்டு ஆயுதப் போராட்டங்களில் போதும் கொல்லப்பட்டவர்களின் தொகை ஆயிரக்கணக்கில் வரும். குறிப்பாக இரண்டாவது ஆயுதப் போராட்டத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தொகை சுமார் 12,000 என்று உத்தியோகபூர்வ குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால் உத்தியோகப் பற்றற்ற குறிப்புகளின்படி அத்தொகை ஒன்றரை லட்சத்தைத் தாண்டும் என்று ஒரு குத்துமதிப்பான கணிப்பு உண்டு.

இவ்வாறு தனது தோழர்களில் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் ஆக்கப்பட்டிருக்கும் ஒரு பின்னணியில், அது தொடர்பாக ஜேவிபி இதுவரை எடுத்த நடவடிக்கைகள்
எவை ?
இந்த கேள்விக்கு விடை கூறமுன்பு, கிட்டத்தட்ட ஆறு ஏழு ஆண்டுகளுக்கு முன் வவுனியாவில் நடந்த ஒரு கருத்தரங்கை இங்கே நினைவுபடுத்த வேண்டும். கருத்தரங்கு ஐரோப்பிய நாடொன்றின் தூதரகத்தின் அனுசரணையோடு நடந்ததாக ஒரு ஞாபகம்.காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஒரு கருத்தரங்கு.அதில் நான் ஒரு பேச்சாளராகக் கலந்து கொண்டேன். தென்னிலங்கையில் இருந்து மற்றொரு வளவாளர்,பேராதனை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, கலாநிதி ஜயலத் கலந்து கொண்டார். தனது உரையில் அவர் ஒரு முக்கியமான விடயத்தைச் சுட்டிக் காட்டினார்.”தென்னிலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கதை என்பது மறக்கப்பட்ட ஒரு கதை” என்று. அவர் கூறினார்.தென்னிலங்கையில் அது மறக்கப்பட்ட கதை என்றால் அதை யார் மறந்தது? யார் அதற்காக போராட வேண்டுமோ அவர்கள், அதாவது ஜேவிபி அதை மறந்து விட்டது என்று தானே பொருள்? ஜேவிபி ஏன் தன் தோழர்கள் தோழியர்கள் காணாமல் ஆக்கப்பட்டதை மறக்க விரும்புகிறது? அல்லது அதற்காக ஏன் நீதி கேட்டுப் போராடத் தயாரில்லை ?
விடை மிக எளிமையானது. மிகக்குரூரமானது. ஜேவிபி தனது தோழர்களுக்கு நீதி கேட்டுப் போராடத் தயாரில்லை. ஏனென்றால் அவ்வாறு நீதி கேட்டுப் போராடினால் அவர்கள் யாரை இப்பொழுது யுத்த வெற்றி நாயகர்களாக கொண்டாடுகிறார்களோ, அவர்களில் பலரை விசாரிக்க வேண்டிவரும். அவர்களில் பலர் குற்றவாளிகளாக தண்டனையை அனுபவிக்க வேண்டி இருக்கும். அதாவது இதை இன்னும் கூர்மையாகச் சொன்னால், இறுதிக்கட்டப் போரில் யாருடைய வெற்றிக்காக ஜேவிபி தன்னை வருத்தி உழைத்ததோ, யாருடைய வெற்றிக்காக ஆட்களை சேர்த்துக் கொடுத்ததோ, யாருடைய வெற்றிக்காக பிரச்சாரம் செய்ததோ,அந்தத் தரப்பை, அதாவது ஸ்ரீலங்கா படைத்தரப்பைத்தான் குற்றம் சாட்ட வேண்டியிருக்கும். விசாரிக்க வேண்டியிருக்கும். தண்டிக்க வேண்டியிருக்கும்.

இதை அவர்கள் செய்வார்களா? இப்பொழுது நாட்டின் ஜனாதிபதியாக இருப்பவர் அதாவது முப்படைத் தளபதி யார் என்று பார்த்தால், ஒரு ஜேவிபி உறுப்பினர்தான். காணாமல் ஆக்கப்பட்ட தன் தோழர்களுக்காக அவர் ஒரு முப்படைத் தளபதி என்ற அடிப்படையில் விசாரணைக்கு உத்தரவிடுவாரா? இல்லை. செய்ய மாட்டார். ஏனென்றால் அவர்களே இறுதிக்கட்டப் போரில் அந்த யுத்தத்தின் பங்காளிகளாக இருந்திருக்கிறார்கள். எனவே விசாரணை என்று தொடங்கினால் ஒரு கட்டத்தில் ஜேவிபியும் அந்த விசாரணைக்குள் வரும். இதுதான் பிரச்சனை. எனவே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கதை தென்னிலங்கையில் எங்கே மறைக்கப்பட்டது என்றால், அதற்காகப் போராட வேண்டிய ஜேவிபி போராட்டத் தயாரில்லை என்பதால்தான். இதை இன்னும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால், தமிழ் மக்களுக்கு எதிரான ஜேவிபியின் இனவாத நிலைப்பாட்டின் காரணமாகத்தான் அவர்கள் இவ்வாறு முடிவு எடுக்க வேண்டியிருக்கிறது. தமது தோழர்களுக்கான நீதியை விடவும் தமிழ் மக்களை வெற்றி கொள்வது முக்கியம் என்று அவர்கள் நம்புகிறார்கள். தமிழ் மக்களை வெற்றி கொண்ட படை வீரர்கள் தண்டிக்கப்படக்கூடாது என்று அவர்கள் நம்புகிறார்கள்.
அதனால்தான் கடைசியாக நடந்த ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் பேசிய புதிய வெளியுறவு அமைச்சராகிய விஜித ஹேரத் ஐநாவின் பன்னாட்டு பொறிமுறையை தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவித்திருந்தார்.அவர் அவ்வாறு கூறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அனுர குமார அசோசியேட் நியூஸ் பிரஸ் இற்கு வழங்கிய ஒரு நேர்காணலில் என்ன சொன்னார் தெரியுமா? பாதிக்கப்பட்ட மக்கள் உண்மையைக் கண்டறிய வேண்டும் என்றுதான் கேட்கின்றார்களே தவிர,குற்றம் சாட்டப்படுகிறவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கேட்கவில்லை என்று. யார் அவருக்கு அப்படிச் சொன்னது? அதாவது பாதிக்கப்பட்ட மக்கள் குற்றவாளிகளை தண்டிக்க விரும்பவில்லை என்று யார் அவர்களுக்குச் சொன்னது? தமிழ்ப் பகுதிகளில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் எந்த ஒரு தாயாவது அவ்வாறு கூறியிருக்கிறாரா?இல்லை. தமிழ் மக்கள் மத்தியில் உள்ள எந்த ஒரு கட்சியாவது அவ்வாறு கூறியிருக்கிறதா? இல்லை. ஆனால் ஜனாதிபதி அவ்வாறு கூறினார். அவர் அப்பொழுது ஜனாதிபதி அல்ல. வேட்பாளராக இருந்தார்.
மேலும், உண்மையை ஏன் கண்டறிய வேண்டும்? நிலை மாறு கால நீதியின் கீழ் உண்மையை கண்டறிவது என்பது குற்றவாளிகளை கண்டறிவது.குற்றம் நடந்த சூழலை, குற்றத்தின் பின்னணியை,குற்றத்துக்கான உளவியல் நோக்கத்தைக் கண்டறிவது.அந்த அடிப்படையில் குற்றவாளிகளை விசாரிப்பது.தண்டிப்பது. அதன்மூலம்,குற்றச் செயல்கள் மீண்டும் இடம்பெறுவதைத் தடுப்பது. குற்றம் புரிந்தாலும் தண்டனையிலிருந்து தப்பலாம் என்ற கொடூரமான பண்பாட்டை மாற்றி, குற்றம் செய்தவர்களை பொறுப்புக்கூற வைப்பது. எனவே உண்மைகளைக் கண்டடைவது என்பது பொறுப்புக் கூறுவதற்காகத்தான். ஆனால் அனுர கூறினார்,பாதிக்கப்பட்ட மக்கள் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கேட்கவில்லை என்று. அதே நிலைப்பாட்டோடுதான் அவர் இப்பொழுதும் காணப்படுகிறாரா?
இப்பொழுது விடயம் மிகத் தெளிவாகத் தெரிகிறது அல்லவா? இப்பொழுதுள்ள அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்கப் போவதில்லை.ஏனென்றால் அதுவே தனது தோழர்கள் காணாமல் ஆக்கப்பட்டதற்கு நீதியைக் கேட்டுப் போராடவில்லை.தனது காணாமல் ஆக்கப்பட்ட தோழர்களை மறப்பதற்குத் தயாரான ஒரு இயக்கம், தமிழ் மக்களின் விடயத்தில் நீதியைப் பெற்றுத்தரும் என்று எப்படி எதிர்பார்ப்பது? ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு வருவதால் அந்த நிலைப்பாட்டில் மாற்றம் வரும் என்று எப்படி எதிர்பார்ப்பது?
நன்றி : நிலாந்தன்