யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் உள்ளிட்ட தமிழர் தாயகத்திலுள்ள ஐந்தாயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்தொரு ஏக்கர் (5941 ஏக்கர்) காணிகளை அரசுடைமையாக்கி அபகரிக்கும் நோக்கில் சிறிலங்கா அரசு முன்று மாதங்களுக்கு முன்னர் விடுத்த வர்த்தமானி அறிவித்தலினை கடைசி நேரத்தில் மீளப்பெற்றிருக்கின்றது சிறிலங்கா அரசு.
முன்னைய வர்த்தமானி அறிவித்தலை விலக்கும் புதிய வர்த்தமானி பிரகடனத்தில் கூட சிறிலங்கா அரசு பொடி வைத்துத்தான் அதனைச் செய்திருக்கின்றது.
“முன்னைய வர்த்தமானி அறிவித்தல் அரசின் கொள்கை முடிவுக்கு அமைய இத்தால் இரத்துச் செய்யப்படுகின்றது.” என்று புதிய அறிவித்தலில் குறிப்பிடப்பட்டள்ள அரசு “மேற்படி காணிகள் உள்ள பகுதிகளில் நிலவும் குறிப்பிட்ட பிரச்சினைகளைக் கருத்தில்க் கொண்டும் இந்த காணிகளுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உரிமை கோருபவர்களுக்கு போதுமான வாய்ப்பை வழங்குவதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.” என்றும் தெரிவித்துள்ளது.
அதன் பொருள், இந்த விடயத்தை இப்போதைக்கு இரத்துச் செய்கின்றோம், தேவைப்பட்டால் போதிய வாய்ப்பை வழங்கி காணி அபகரிப்பு நடவடிக்கையை பிறிதொரு புதிய அறிவித்ததல் மூலம் முன்னெடுக்க நடவடிக்கை எடுப்போம் என்பது தான் என சட்ட வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
மூல – முதல் வர்த்தமானி அறித்தல் மார்ச் 28, 2025 ஆம் திகதி வெளியிடப்பட்டது. அதன்படி மூன்று மாதகாலத்தில், யூன் மாதம் 28ஆம் திகதி மேற்படி காணிகளில் சான்றாதாரங்கள் மூலம் உரிமைகள் நிலை நாட்டப்படாதவற்றைச் சுவீகரிக்கும் அதிகாரம் அரசுக்கு வந்துவிடும் என்ற நிலைமையில் நேற்றுக் கடைசி நேரத்தில் அந்த வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியிருந்தது.
எனினும் யூன் 27, 2025 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானியின் அடிப்படையில், இந்தக் காணிகளுக்கு உரிமை கோரக்கூடியவர்களுக்கு போதிய வாய்ப்பை வழங்கி அதன் பின்னர் காணி அரசுடமையாக்கி அபகரிக்கும் முயற்சி எச்சமயத்திலும் முன்னெடுக்கப்படலாம் என்ற விவரம் உள்ளடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
