ஹட்டன் மல்லியப்பு பகுதியில் அண்மையில் விபத்துக்குள்ளான பேருந்தின் சாரதி இருக்கைக்கு அருகாமையில் உள்ள கதவின் பூட்டு இயங்காத காரணத்தினால் கதவு திறக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான பேருந்தை நுவரெலியா மாவட்ட மோட்டார் வாகன பரிசோதகர் மேற்கொண்ட பரிசோதனைகளின் பின்னர் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன் பேருந்தின் சாரதி பாதுகாப்பு பட்டியை அணிந்திருக்கவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
பேருந்தில் அதிகளவில் இரும்பு சாதனங்கள் பொருத்தப்பட்டிருந்ததால் பயணிகளுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டிருந்தமையும் தெரியவந்துள்ளது.
ஹட்டன் மல்லியப்பு பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 14 வயது சிறுவன் ஒருவன் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த 53 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
அத்துடன், குறித்த விபத்தில் காயமடைந்த பேருந்து சாரதி சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்புக்கு மத்தியில் தொடர்ந்தும் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த சாரதியிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், அவரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் பதில் நீதவான் உத்தரவிட்டார்.