சிறி லங்காவின் வடக்கில் உள்ள மிகப் பெரிய நானாவித வர்த்தக கண்காட்சியாகக் குறிக்கப்படும் யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சியை ஜனவரி மாதம் 24 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
15ஆவது வருடமாக நடைபெறும் இந்த கண்காட்சி ஜனவரி மாதம் 24 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை, யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
‘வடக்கிற்கான உங்கள் நுழைவாசல்’ என்ற தொனிப் பொருளில் நடைபெறும் இந்த நிகழ்வில், சிறி லங்கா மற்றும் வெளிநாடுகளில் உள்ள தொழில் முயற்சியாளர்கள், வர்த்தக வல்லுனர்கள் மற்றும் சமூக உறுப்பினர்களை ஒன்றிணைத்து பொருளாதார நிகழ்வாக நடைபெறவுள்ளது.
குறிப்பாகப் பிராந்தியத்தின் பொருளாதார ஆற்றல் மற்றும் செழிப்பான தொழில்துறை என்பன விரிவாகக் காட்சிப்படுத்தப்படும்.
கடந்த 2002 ஆம் ஆண்டு இந்த சர்வதேச வர்த்தக கண்காட்சி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து குறிப்பிடத் தக்க வகையில் வளர்ச்சியடைந்துள்ளதாக வர்த்தக சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.
புதிதாக வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பல தொழில் முனைவோர் அதிக அளவில் வருடா வருடம் இந்த கண்காட்சி நிகழ்வில் கலந்து கொள்வதாக ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த கண்காட்சி மூலம் சிறி லங்காவின் வடக்கில் உள்ள தனிநபர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்குத் தொடர்ந்தும் ஒரு தளத்தை வழங்கி வருவதாக யாழ்ப்பாண வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனம் சுட்டிக் காட்டியுள்ளது.