நீண்ட காலமாக தாமதிக்கப்பட்டு வந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் அதற்கான ஏற்பாடுகளை தேர்தல்கள் ஆணைக்குழு ( Election Commission) விரைவிலேயே ஆரம்பிக்கவுள்ளதாக கொழும்பின் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த தேர்தலுக்கு எட்டு பில்லியனுக்கும் அதிகமாக செலவாகும் என முன்னர் மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், தேர்தலை நடத்துவதற்கான நிதியைப் பெறுவதற்கு தேர்தல் ஆணையம் புதிய மதிப்பீடுகளை திறைசேரிக்கு அனுப்பும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க (R.M.A.L. Rathnayake) தெரிவித்துள்ளார்.
புதிதாக வேட்புமனுக்கள்
முன்னதாக, தேர்தல்கள் ஆணையம், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக, 2023 ஆம் ஆண்டு 8 பில்லியன் ரூபாய்களை மதிப்பிட்டிருந்தபோதும், தற்போதைய தேர்தல் செலவு அதைவிட அதிகமாக இருக்கும் என்பதால் புதிய மதிப்பீடுகளை அனுப்பவுள்ளதாக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்துச் செய்து புதிதாக வேட்புமனுக்களை கோருவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
முன்னதாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ளுமாறு இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கையின் உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.