யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைப்பீட பீடாதிபதி சி.ரகுராம் இனுடைய மாணவர் விரோத முடிவுகளை எதிர்த்து நேற்றைய தினம் (25.10.2024) கவனயீர்ப்பினை முன்னெடுத்த மாணவர் பிரதிநிதிகள் இருவர் மீது நேற்றைய தினமே கலைப்பீட பீடாதிபதியினால் கற்றல் உள்ளிட்ட பல்கலைக்கழகம் சார் செயற்பாடுகள் அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் தங்கள் வாட்சப் குழுக்களில் மேற்கொண்ட உரையாடல்களை அடிப்படையாகக் கொண்டு, நேற்று முன்தினம் (24.10.2024) நள்ளிரவில் குறித்த மாணவர் பிரதிநிதிகள் மீதான விசாரணைகளுக்கான அறிவுறுத்தல் கலைப்பீட பீடாதிபதியினால் வழங்கப்பட்டிருந்தது. விதிகளுக்குப் புறம்பாக தொலைபேசியில் அதுவும் நள்ளிரவில் மாணவர்கள் மீதான விசாரணைகளுக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
போராட்டம் நடைபெறும் சம நேரத்தில் மாணவர் பிரதிநிதிகளை விசாரணைகளுக்கு அழைப்பதன் ஊடாக உளவியல் அச்சுறுத்தல் விடுத்து மாணவர் போராட்டத்தை நசுக்குவதற்கு முயற்சித்த கலைப்பீட பீடாதிபதியின் குரல்ப்பதிவு சமூக வலைத்தளங்களில் காணக்கூடியதாகவிருந்தது.
இந்நிலையிலேயே, போராட்டத்தில் ஈடுபட முயன்ற இரண்டு மாணவர் பிரதிநிதிகளுக்கு கலைப்பீட பீடாதிபதியினால் நேற்றைய தினம் பல்கலைக்கழகத்தினுள் நுழைதல், கற்றல் உள்ளிட்ட அனைத்துச் செயற்பாடுகளிலும் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டள்ளது.
கலைப்பீடத்தில் முதலாம் வருட மாணவர்களுக்கான பாடங்களைத் தெரிவு செய்வதில் 150 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களின் விருப்பத் தேர்வுப் பாடங்கள் கிடைக்கவில்லை என்று தங்களுக்குரிய பாடங்களை வழங்குமாறு கோரிய எவையும் கோரிக்கைகள் பலனளிக்காத நிலையில் மாணவர்கள் கவனயீர்பொன்றினை மேற்கொள்வதற்கே மாணவர்கள் முயன்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கலைப்பீட மாணவர் ஒன்றியம் இவ்விடயம் தொடர்பில் கவனம் கொள்ளாத நிலையில், மாணவர்களால் குறித்த விடயம் மாணவர்களினால் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இது தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்வரும் வாரம் பல்கலைக்கழகம் தழுவிய பாரிய எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு திட்டமிட்டு வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து அறியக் கிடைக்கின்றது.
விரும்பிய பாடங்களை கற்பதற்கு கல்வி உரிமை கேட்டுப் போய், இன்று போராடுவதற்கே உரிமை கேட்கும் அவலம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ளதாக மாணவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.